கே.சி. வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் சோதனை : முக்கிய ஆவணங்கள் சிக்கின

By 
K.C. Testing at 28 locations owned by Veeramani Important documents were seized

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை சோதனையை தொடங்கியுள்ளனர்.

கே.சி.வீரமணியின் சொந்த ஊர் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகில் உள்ள எடையாம்பட்டி ஆகும். 

அமைச்சராக இருந்த காலத்தில் கே.சி.வீரமணி தனது சொந்த மாவட்டமான திருப்பத்தூர் உள்ளிட்ட பல இடங்களில், தனது வருமானத்துக்கு அதிகமான சொத்துகளை வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கே.சி.வீரமணி பத்திரப்பதிவுத்துறை அமைச்சரான பிறகு, பல்வேறு இடங்களில் முறைகேடாக சொத்துகளை வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

அதிரடி சோதனை :

ஜோலார்பேட்டை காந்தி ரோட்டில் உள்ள வீட்டில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வசித்து வருகிறார். இன்று காலை 6.30 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ராஜேஷ் தாஸ் தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். அவர்கள் வீட்டில் இருந்த கே.சி.வீரமணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கே.சி.வீரமணியின் சகோதரர்கள் கே.சிஅழகிரி, கே.சி. காமராஜ் ஆகியோர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருகிறது.

ஜோலார்பேட்டை சோலையூர் பகுதியிலுள்ள அ.தி.மு.க. நகர செயலாளர் சீனிவாசன் வீட்டிலும் சோதனை நடந்தது.

தாமலேரி முத்தூரில் உள்ள ஒன்றிய செயலாளர் ரமேஷ், நாட்டறம்பள்ளி மல்லகுண்டா கிராமத்திலுள்ள ஒன்றிய செயலாளர் ராஜா, திருப்பத்தூரில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ., கே.ஜி ரமேஷ், ஏலகிரி கிராமத்தில் உள்ள அ.தி.மு.க. மகளிரணி செயலாளர் சாந்தி ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடந்தது.

ஜோலார்பேட்டை நாட்டறம்பள்ளி ரோட்டில் உள்ள கே.எஸ். திருமண மண்டபம் வாலாட்டியூர் கிராமத்திலுள்ள கே.சி.வீரமணிக்கு சொந்தமான பீடி கம்பெனி ஆகிய இடங்களில் சோதனை நடந்தது.

திருப்பத்தூர் மற்றும் ஏலகிரி மலையில் உள்ள கே.சி.வீரமணிக்கு சொந்தமான ஓட்டல்களிலும் சோதனை நடைபெற்றது.

குடியாத்தம் கொத்தமாரி குப்பம் கிராமத்தில் கே.சி. வீரமணிக்கு சொந்தமான வேளாண் கல்லூரியில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

வேலூரில் முன்னாள் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கர்ணல் என்பவருக்கு சொந்தமான சத்துவாச்சாரி, சேண்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள வீடுகளில் சோதனை நடந்தது.

இதேபோல, அரக்கோணத்தை சேர்ந்த அதி.மு.க. இளைஞர் பாசறை மாவட்ட துணை தலைவர் ஷியாம் வீட்டில் சோதனை நடந்தது.

இன்று காலை 6 மணியில் இருந்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் திருப்பத்தூர், சென்னை, கிருஷ்ணகிரி, ஏலகிரி, பெங்களூர், ஓசூர் உள்பட 28 இடங்களில் கே.சி.வீரமணிக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

சோதனை நடைபெறும் சாந்தோமில் உள்ள கே.சி.வீரமணி வீட்டின் அருகே பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ள போலீசாரை படத்தில் காணலாம்.

திருப்பத்தூரில் 15 இடங்களில், சென்னையில் சாந்தோம், கொளத்தூர், சூளைமேடு, அண்ணாநகர் உள்ளிட்ட 4 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள மூக்கண்டப்பள்ளியில் கே.சி.வீரமணிக்கு சொந்தமான 7 ஹீல்ஸ் நட்சத்திர விடுதி உள்ளது. இன்று காலை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர்.

கோவை மண்டல லஞ்ச ஓழிப்புத்துறை ஏடிஎஸ்பி திவ்யா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை 6 மணியளவில் நட்சத்திர ஓட்டலுக்கு வந்தனர். 

ஓட்டல் வரவேற்பு அறை, மற்றும் அலுவலக அறைகளில் சோதனை நடத்தி வருகிறார்கள். இதையொட்டி நட்சத்திர விடுதி முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெளியாட்கள் யாரும் ஓட்டலுக்கு செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.

கே.சி.வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களிலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சொத்து மதிப்பு :

கடந்த 2011-ம் ஆண்டு கே.சி.வீரமணியின் சொத்து மதிப்பு ரூ.7.48 கோடியாக இருந்தது. அது அடுத்த 10 ஆண்டுகளில் பலமடங்கு அதிகரித்துள்ளது. தற்போது, அவரது சொத்து மதிப்பு ரூ.90 கோடியை தாண்டி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் அசையா சொத்து மற்றும் அசையும் சொத்துக்களின் மதிப்பும் அதிகரித்துள்ளது. 

கே.சி.வீரமணி தனது உறவினர்கள் பெயரில் சொத்துகளை வாங்கி அதனை தனது பெயருக்கு தானமாக மாற்றி இருப்பதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. 

இந்த புகார்களின் அடிப்படையில், வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளார். அதன் அடிப்படையில் இன்று சோதனை நடைபெற்று உள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் கே.சி.வீரமணி முறைகேடாக சொத்துக்களை வாங்கி இருப்பதாக, முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கிய ஆவணங்கள் :

இன்று நடைபெற்ற சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே, எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு உள்ள நிலையில் 3-வதாக முன்னாள் அமைச்சரான கே.சி.வீரமணி வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருகிறது. இது அ.தி.மு.க. மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this story