மழலையர் பள்ளிக்கூடம் திறப்பு : தமிழக கல்வித்துறை அறிவிப்பு

By 
Kindergarten Opening Tamil Nadu Education Department Announcement

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டன.

இதனால், அனைத்து தொழில் நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டன. 

பொழுது போக்கு மையங்கள், பூங்காக்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து தொழில் சார்ந்த நிறுவனங்களும் திறக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.

வழிகாட்டு நெறிமுறை :

செப்டம்பர் 1-ந் தேதி 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

ஒரு வகுப்பிற்கு 20 மாணவர்கள் வீதம் சுழற்சி முறையில் கல்வி கற்பித்தல் பணி நடைபெறுகிறது. பள்ளிகள் திறந்து 1 மாதத்திற்கு மேலாகியும், பாதிப்பு பெரிய அளவில் இல்லாததால் அடுத்தகட்டமாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்தது.

நவம்பர் 1-ந் தேதி முதல் அனைத்து ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

19 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணிகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிகளை திறக்க அனைத்து முன் ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

மகிழ்ச்சி :

நீண்ட இடைவெளிக்கு பிறகு மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவதால், அவர்களின் மன அழுத்தத்தை போக்க பாடப்பகுதிகளை நடத்தாமல் பொதுவான கதைகள், பாடல்கள் பாடி மாணவர்களை மகிழ்ச்சி ஊட்டவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவால் 2 கல்வி ஆண்டுகள் பாதிக்கப்பட்டு இருப்பதால் 1, 2-ம் வகுப்பு குழந்தைகள் முதன் முதலாக நவம்பர் 1-ந் தேதிதான் பள்ளிக்கு வருகிறார்கள். அதனால் அவர்களுக்கு அந்த சூழ்நிலை புதிதாக இருக்கும் என்பதால், விருப்பப்பட்டால் குழந்தைகளுடன் பெற்றோர்களும் இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் நவம்பர் 1-ந் தேதி திறக்கப்படும் என்று தகவல் பரவியது. இதனை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மறுத்திருந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுகாதார மற்றும் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னரே இதுபற்றிய முடிவை அறிவிப்பார் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் நவம்பர் 1-ந் தேதி திறக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக, வெளியிட்டுள்ள அரசாணையில், 'மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் வருகிற 1-ந் தேதி திறப்பதற்கான வாய்ப்பு இல்லை. நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனால், எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் மற்றும் அதற்கு முந்தைய மழலையர் பள்ளிகள் திறப்பது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Share this story