பயங்கர நிலச்சரிவு : பலி எண்ணிக்கை 66-ஐ தாண்டியது..
 

By 
ima

வட மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மலை மாநிலங்களில் பருவ மழை வழக்கத்தைவிட அதிகமாக கொட்டி வருகிறது.

இமாச்சல்பிரதேசத்தில் கடந்த வாரம் முதல் பெய்துவரும் கன மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவால் பல இடங்களில் வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இமாசலபிரதேசத்தின் மண்டி பகுதியில் மேகவெடிப்பு காரணமாக கன மழை கொட்டியதில் 7 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.

அதை தொடர்ந்து 2-வது கொட்டமாக தொடர்மழை கொட்டி வருகிறது. இதையும் படியுங்கள்: கனமழையால் இமாச்சல பிரதேசத்தில் ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு: முதல்-மந்திரி தகவல் தலைநகர் சிம்லாவில் மழையினால் தொடர்ந்து பேரழிவு ஏற்பட்டு வருகிறது. மழையினால் இயல்பு வாழ்க்கை முடங்கி போயுள்ளது.

சிம்லா கிருஷ்ணா நகர் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் 2 பேர் உயிரிழந்தனர். 5 முதல் 10 பேர் வரை இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சிம்லாவின் லால்பானி பகுதியில் மரங்கள் விழுந்ததில் இறைச்சி கூடம் மற்றும் பிற கட்டிடங்கள் சேதமடைந்தன.

மழை காரணமாக இந்த கட்டிடம் சிறிது நேரத்தில் இடிந்து விழுந்தது. ஏற்கனவே சிம்லா சம்மர் ஹில்ஸ் பகுதியில் கனமழையால் சிவன் கோவில் இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழந்தனர். தற்போது மேலும் 2 பேர் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். 4 நாட்கள் ஆகியும் அவர்கள் மீட்கப்படவில்லை. பாக்லி பகுதியில் பல வீடுகள் சேற்றில் புதைந்தன. இங்கு 15 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சோலான், ஜடோன், பலேரா ஆகிய கிராமங்களில் பெய்த இடைவிடாத மழை காரணமாக 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பானல் கிராமத்தில் ஒரு பெண் உயிரிழந்தார். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சிம்லாவில் ஏற்பட்ட 2 நிலச்சரிவுகளில் இதுவரை 14 உடல்கள் மீட்கப்பட்டன. பலர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதால் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்பு படையினர் மற்றும் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி ஆகிய புனிதத் தலங்களுக்குச் செல்லும் சாலைகள் நிலச்சரிவு காரணமாக சேதமடைந்துள்ளன. இதன் விளைவாக, சார்தாம் யாத்ரா என்று அழைக்கப்படும் புனித தலங்களுக்கான யாத்திரை 2 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் மீண்டும் இன்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழைக்கு இதுவரை 66 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மழையால் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகு இரங்கல் தெரிவித்துள்ளார். வீட்டில் விரிசல் ஏற்பட்டால், உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும் என பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இதனுடன், சிம்லா உள்ளிட்ட மழை பெய்யும் பகுதிகளில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இமாச்சல பிரதேசத்தில் டேராடூன், பவுரி, தெக்ரி, நைனிடால், மற்றும் உதம் சிங் நகர் போன்ற பகுதிகளில் தொடர்ந்து மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலச்சரிவு மற்றும் கன மழையால் 752 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த மாதம் ஜூன் 24 ம் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை, ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பாதிப்புகளால் ரூ.6,807 கோடி அளவுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மழை தொடர்பான சம்பவங்கள் மற்றும் சாலை விபத்துகளில் இதுவரை 225 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பருவநிலை மாற்றத்தின் கீழ், சம்பா, காங்க்ரா, குலு, மண்டி, உனா, ஹமிர்பூர் மற்றும் பிலாஸ்பூர் மாவட்டங்களில் கடுமையான மழை பெய்யக்கூடும் என்று வானிலை இலாகா எச்சரித்து உள்ளது.

கன மழையால் சட்லஜ், பியாஸ் மற்றும் யமுனா ஆறுகள் மற்றும் அவற்றின் துணை நதிகளான கின்னவுர், சிம்லா, குலு, மண்டி, பிலாஸ்பூர் மற்றும் சிர்மௌர் மாவட்டங்களில் பெருக்கெடுத்து ஓடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆறுகள் பஞ்சாப் மற்றும் அரியானா வழியாக செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரகாண்ட் மாநிலத்திலும் பல பாலங்கள் மற்றும் சாலைகள் பலத்த மழையால் அடித்துச் செல்லப்பட்டு உள்ளன. இதனால் மக்கள் பல்வேறு இடங்களில் முடங்கியுள்ளனர். கனமழையின் காரணமாக, மத்மகேஷ்வர் நடை பாதையில் பந்தோலி அருகே நடை பாதை பாலம் அடித்துச் செல்லப்பட்டது. ருத்ரபிரயாக்கில், கோவிலுக்குச் செல்லும் 2-வது கேதார் மத்மகேஷ்வர் பாதையில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 250 பக்தர்களில் 40 பேர் மீட்கப்பட்டனர். மற்றவர்களை மீட்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

வெள்ளம் காரணமாக, கவுண்டர் கிராமம், தெஹ்சில், உகிமத் மற்றும் ருத்ரபிரயாக் ஆகியவற்றுடன் 2-வது கேதார் மத்மஹேஷ்வரின் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தலைநகர் டூனின் சஹஸ்ரதாராவில் 72 ஆண்டுக்கு பின்னர் கன மழை பெய்துள்ளது. சஹஸ்ரதாராவில் 251 மி.மீ. மழை பெய்துள்ளது. அதேசமயம், கடந்த 1952-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி 332.2 மி.மீ., மழை பெய்ததே இதுவரை சாதனையாக இருந்தது.

சஹஸ்ரதாராவின் பெரும்பகுதி காடுகளால் சூழப்பட்டிருப்பது அதிக மழை பெய்ய காரணம் என்கின்றனர் வானிலை அதிகாரிகள். டேராடூனில் மொத்தம் 175.1 மிமீ மழை பெய்துள்ளது, இது இயல்பை விட சுமார் 1000 சதவீதம் அதிகமாகும். இதனிடையே டெஹ்ராடூன், டெஹ்ரி, பவுரி ஆகிய இடங்களில் மழைக்கான ஆரஞ்சு அலர்ட் மற்றும் உத்தரகாண்டின் பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

போலீசார் மற்றும் பாதுகாப்பு படைகளின் குழுக்கள் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளன. சார்தாம் யாத்திரைக்கு வரும் மக்கள் வானிலை நிலையைப் பார்த்த பின்னரே மாநிலத்திற்கான பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 
 

Share this story