சிறுமியை கர்ப்பமாக்கிய நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை: நீதிபதி உத்தரவு

By 
rape4

கரூர் மாவட்டம் குரும்பபட்டியை அடுத்த ஒலிகரட்டூரில் 9ம் வகுப்பு வரை படித்து விட்டு இடை நிற்றலாகிய சிறுமி, பெற்றோர் கூலி வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் இருக்கும் ஆடுகளை மேய்ச்சலுக்காக அருகில் உள்ள காட்டிற்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்போது அதே கிராமத்தில் வசிக்கும் மகேஷ் என்கின்ற மகேஷ்வரன் (வயது 40) அதே காட்டில் ஆடு மேய்க்க வந்துள்ளார். 

சிறுமியை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார். பிறகு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 2021ம் ஆண்டு தீபாவளி தினத்தன்று சிறுமியிடம் அத்து மீறியுள்ளார். அதனை தொடர்ந்து ஒரு வருடமாக அவரிடம் நெருங்கி பழகியதால் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.

இதனை வீட்டில் சொல்லக் கூடாது என மகேஷ் சொல்லி இருந்ததால் சிறுமியும் யாரிடமும் சொல்லாமல் மறைத்து விட்டார். ஒரு கட்டத்தில் சிறுமியின் கை, கால்கள் வீங்கிய நிலையில், வயிற்று வலி ஏற்பட்டதால் அவரை கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். 

கடந்த 14.02.2023 அன்று சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து பெற்றோர் குழந்தைகள் நல பாதுகாப்பு அலகிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த அலுவலர்கள் சிறுமியிடம் விசாரித்த பிறகு கரூர் ஊரக உட்கோட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மகேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இது தொடர்பான வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற இறுதி விசாரணையில் குற்றவாளிக்கு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்து நீதிபதி நசீமா பானு தீர்ப்பளித்தார். இதனை தொடர்ந்து குற்றவாளி மகேஷை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றனர்.

Share this story