தக்காளியை கடத்தி வந்து சென்னையில் விற்பனை : கணவன், மனைவி கைது

தமிழகத்தை சேர்ந்த தம்பதி பெங்களூருவில் இருந்து தக்காளியை வாகனத்துடன் கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்துள்ளனர். பெங்களூரு அருகே உள்ள சித்ரதுர்காவை சேர்ந்த விவசாயி மல்லேஷ். இவர் தோட்டத்தில் தக்காளி பயிரிட்டிருந்தார். விளைச்சல் அதிகரித்த நிலையில் அவற்றை அறுவடை செய்தார்.
இதில் அவருக்கு 2 டன் தக்காளி சேர்ந்தது. பின்பு அவற்றை கோலார் மாவட்டத்திற்கு சரக்கு வாகனத்தில் விற்பனைக்கு எடுத்து வந்தார். பெங்களூரு எலகங்கா அருகே ஹெப்பால் சாலையில் வந்தபோது ஒரு இடத்தில் தக்காளி வாகனத்தை அவரும், டிரைவரும் டீ குடிப்பதற்காக நிறுத்தினர். பின்னர் வாகனத்தில் புறப்பட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர்களை வழி மறித்தனர்.
தங்களது மோட்டார் சைக்கிளில் சரக்கு வாகனம் மோதியதாக கூறி அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அவர்களது கூட்டாளிகள் 3 பேர் அங்கு வந்தனர். 5 பேரும் சேர்ந்து பின்னர் மல்லேசையும், டிரைவர் சிவண்ணாவையும் தாக்கி கீழே தள்ளினர். பின்னர் 2 டன் தக்காளியை சரக்கு வாகனத்துடன் அவர்கள் கடத்தி சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மல்லேஷ், ஆர்.எம்.சி. யார்டு போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை தேடிவந்தனர். இந்த நிலையில் தக்காளி இல்லாமல் வாகனம் மட்டும் தேவனஹள்ளி புறநகர் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. உடனே போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.
விசாரணையில் சரக்கு வாகனத்துடன் தக்காளியை கடத்தியது தமிழ்நாடு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த பாஸ்கர்(வயது 38), அவரது மனைவி சிந்துஜா(36) உள்ளிட்ட 5 பேர் கும்பல் என்று தெரிந்தது. தக்காளியை வாகனத்துடன் கடத்திய கும்பல் அதை சென்னைக்கு கொண்டு வந்துள்ளனர். சென்னையில் 2 டன் தக்காளியையும் ரூ.1.60 லட்சத்துக்கு விற்பனை செய்து உள்ளனர். மேலும் அந்த பாஸ்கர், சிந்துஜா உள்ளிட்ட உள்பட 5 பேரும் பணத்தை ஆளாளுக்கு பிரித்துக்கொண்டனர். அதன்பின்னர் சரக்கு வாகனத்தை பெங்களூருவுக்கு எடுத்து வந்துள்ளனர்.
போலீசிடம் இருந்து தப்பிக்க, சரக்கு வாகனத்தை தேவனஹள்ளி புறநகர் பகுதியில் நிறுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து பெங்களூரு போலீசார் வழக்கு பதிவு செய்து பாஸ்கர், சிந்துஜாவை வாணியம்பாடிக்கு வந்தனர். அங்கு அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களுடன் வந்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.