சிறுமியை பலாத்காரம் செய்த மகனுக்கு 20 வருட சிறை தண்டனை பெற்றுத் தந்த தாய்..

By 
20y

உ.பி.யில் 2019ஆம் ஆண்டு மே மாதம் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூல்சந்த் என்ற இளைஞருக்கு அவரது தாயே சிறை தண்டனை பெற்றுக்கொடுத்திருக்கிறார்.

24 வயதாகும் மூல்சந்த் என்ற இளைஞருக்கு உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹாவில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

தவறு நடந்த சில நாட்களுக்குப் பிறகு, தன் மகனின் கொடூரமான செயலை அறிந்து வருந்திய தாய், மன்னிப்புக் கோருவதற்காக பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார். சிறுமியின் குடும்பத்தினர் முன் தன் மகன் செய்த குற்றத்தைத் தெரிவித்து, உரிய தண்டனை பெற்றுத்தர தானும் ஆதரவாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை மூல்சந்த் பைக்கில் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின், வீட்டிற்கு வந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை சிறுமி வீட்டில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். மூல்சந்த் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால், சிறுமியால் அவரது அடையாளத்தைக் கூற முடியவில்லை.

சிறுமி கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக காவல்துறையில் புகார் கொடுத்தனர். சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதித்ததில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து போலீசார் அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்தச் சூழலில்தான் அசாதாரணமான சம்பவம் ஒன்று நடந்தது. குற்றவாளியின் தாய் சிறுமியின் குடும்பத்தினரைச் சந்தித்து தன் மகன் செய்த குற்றத்தைத் தெரிவித்துவிட்டார். இதனையடுத்து மூல்சந்த் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அக்டோபர் 19, 2019 அன்று ஒரு குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார், வெள்ளிக்கிழமை இளைஞர் மூல்சந்த்க்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து, ரூ.60,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Share this story