51,000 பேருக்கு பிரதமர் மோடி இன்று பணி நியமன ஆணை..

By 
51000

நாடு முழுவதும் மத்திய அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பிரதமர் மோடி கடந்த ஆண்டு அறிவுறுத்தினார். அதன்படி ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ரோஜ்கர் மேளா என்ற வேலைவாய்ப்பு திருவிழாவை பிரதமர் மோடி கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார். அதன்படி மாதந்தோறும் ஆயிரக்கணக்கானோருக்கு பணி நியமன ஆணைகளை மோடி வழங்கி வருகிறார்.

அந்த வகையில் இன்று புதிதாக அரசு வேலைகளில் நியமனம் செய்யப்பட்ட 51,000 பேருக்கு பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் பணி நியமன ஆணைகளை வழங்கினார். ரயில்வே,  உள்துறை, வருவாய், உயர்கல்வி, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் உள்ளிட்ட பல துறைகளில் இவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்..

ரோஸ்கர் மேளா, வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிப்பதற்கான பிரதமரின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான ஒரு படியாகும் என்றும், மேலும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் ஊக்கியாக செயல்படும் என்றும், நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே கடந்த அக்டோபர் மாதம் முதல் 5.5 லட்சம் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை அரசு விநியோகித்துள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்டில், பல்வேறு மத்திய ஆயுதக் காவல் படைகளுக்கு BSF, CRPF CISF, SSB மற்றும் ITBP பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக ரோஸ்கர் மேளா திட்டம் உள்ளது மத்திய அமைச்சர் பி.எல்.வர்மா தெரிவித்துள்ளார்.

இந்த ரோஜ்கார் மேளா நிகழ்வின் மூலம், உள்துறை அமைச்சகம் (MHA) CRPF, BSF, SSB, Assam Rifles, CISF, ITBP, மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் மற்றும் டெல்லி காவல்துறை போன்ற பல்வேறு துறைகளில் பணியாளர்களை பணியமர்த்துகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய உள்துறை அமைச்சகம் இந்த ஆட்சேர்ப்பு மூலம் சுமார் ஒரு லட்சம் பணியிடங்களை நிரப்பியுள்ளது, அவற்றில் சுமார் 87,000 காலியிடங்கள் மத்திய ஆயுதப்படைகளில் நிரப்பப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Share this story