எதிர்க்கட்சியினரின் செல்போன் ஒட்டு கேட்பு: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு..

By 
rahul36

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல்  காந்தி, எதிர்கட்சியினரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

“எதிர்க்கட்சிகளின் பல தலைவர்கள் தங்கள் ஐபோன் சாதனங்களில் ‘அரசு ஆதரவுடன் தாக்குதல் நடத்துபவர்கள் உங்கள் சாதனத்தை குறிவைக்கலாம்’ என்ற எச்சரிக்கையைப் பெற்றுள்ளனர். அதானியை தொட்டவுடன் இது நடக்கிறது” என்று ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

அதானியைத் தொட்டவுடன், உளவுத் துறையினர் ஒட்டுக் கேட்பதற்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். தொழிலதிபர் அதானி முதலிடத்தில் இருப்பதாகவும், அதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருப்பதாகவும் அவர் கூறினார்.

“இதற்கு முன்பு நான் நம்பர் 1 பிரதமர் மோடி, நம்பர் 2 அதானி மற்றும் நம்பர் 3 அமித் ஷா என்று நினைத்திருந்தேன். ஆனால் அது தவறு, நம்பர் 1 அதானி, நம்பர் 2 பிரதமர் மோடி மற்றும் நம்பர் 3 அமித் ஷா. இந்திய அரசியலை நாங்கள் புரிந்து கொண்டோம், இப்போது அதானியால் தப்பிக்க முடியாது. திசை திருப்பும் அரசியல் நடக்கிறது.” என்று ராகுல் காந்தி கூறினார்.

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “எனது அலுவலகத்தில் உள்ள பலருக்கு ஆப்பிள் அனுப்பிய எச்சரிக்கை செய்தி வந்துள்ளது. காங்கிரஸில் கே.சி.வேணுகோபால், சுப்ரியா, பவன் கேரா ஆகியோருக்கும் அந்த செய்தி வந்துள்ளது. அவர்கள் (பாஜக) இளைஞர்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். அரசாங்கம் முடிந்தவரை ஒட்டு கேட்கட்டும். ஆனால், அதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். வேண்டுமென்றால் எனது செல்போனை தருகிறேன்; எடுத்துக் கொள்ளுங்கள்; நான் பயப்பட மாட்டேன்.” என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வந்த மின்னஞ்சல் நகலை செய்தியாளர்களிடம் காட்டிய ராகுல் காந்தி, இது குற்றவாளிகள் மற்றும் திருடர்களின் வேலை என்றும் குற்றம் சாட்டினார்.

முன்னதாக, எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்களின் செல்போன் பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டுக் கேட்கப்படுவதாக 2019ஆம் ஆண்டில் சர்ச்சை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story