ரயில் சேவை, இன்றுமுதல் முழு அளவில் இயக்கம்

By 
Rail service, fully operational from today

கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவை அத்தியாவசிய பணியில் ஈடுபடுபவர்களுக்கான சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்டன.

இதனால், முன்கள பணியாளர்கள், மத்திய- மாநில அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் பல்வேறு விதிகளுக்கு உட்பட்டு பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. கடந்த டிசம்பர் மாதம் தொற்று பாதிப்பு குறைந்ததால், பொது மக்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், மே மாதம் மீண்டும் தொற்று தீவிரம் அடைந்ததால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மின்சார ரயில் சேவையும் குறைக்கப்பட்டன. முன்கள பணியாளர்களுக்கு மட்டும் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

அரசின் தீவிர தடுப்பு நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு குறைந்தது. தற்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மாநகர பஸ் போக்குவரத்து இந்த 4 மாவட்டங்களிலும் கடந்த 21-ந்தேதி முதல் தொடங்கியது. மெட்ரோ ரயில்களும் குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன.

இன்று முதல் :

இந்நிலையில், மின்சார ரெயில்களில் பொதுமக்களை அனுமதிக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. 

பஸ்களில் நெரிசலோடு பயணம் செய்வதால் தொற்று பரவக்கூடிய நிலை உருவாகும் என்பதால் மின்சார ரயில் சேவை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மின்சார ரயில்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.

கொரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி ஒரு சில கட்டுப்பாடுகளுடன் மின்சார ரெயில்கள் கூடுதலாக விடப்பட்டுள்ளது. இதுவரையில் 478 மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் 630 சேவைகள் அளிக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

4 வழித்தடங்களிலும் வழக்கமான அளவில் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை சேவை உள்ளது. பொது மக்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்ட போதிலும் பயண நேரத்தில் சில கட்டுப்பாடுகளை ரயில்வே விதித்துள்ளது.

 சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டத்தை படத்தில் காணலாம்.

அடையாள அட்டை :

மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், ஐகோர்ட் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அனுமதி கடிதம் மற்றும் அடையாள அட்டையுடன் பயணிக்கலாம்.

மேலும், இவர்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மின்சார ரெயிலில் பயணம் செய்யலாம். இவர்களுக்கு அனைத்து வகையான டிக்கெட்டுகளும் வழங்கப்படும். வெளியூர்களில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் ரயில் நிலையங்கள் வந்து அங்கிருந்து புறநகர் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் மின்சார ரெயிலில் பயணிக்கலாம்.

அவர்கள் தாங்கள் வைத்து இருக்கும் முன்பதிவு டிக்கெட்டை காண்பித்து ஒருமுறை பயணம் செய்வதற்கான டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம். இவர்கள் மின்சார ரெயில்களில் எந்த நேரத்திலும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு கட்டுப்பாடு கிடையாது :

அதேபோல, பெண் பயணிகளும் எப்போது வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். அவர்களுக்கு கட்டுப்பாடுகள் கிடையாது. அனைத்து வகையான டிக்கெட்டுகளும் வழங்கப்படும். 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பெண் பயணிகள் அழைத்து செல்லலாம்.

ஆண் பயணிகள் கூட்ட நெரிசல் அதிகம் இல்லாத நேரத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு ஒரு முறை செல்வதற்கான டிக்கெட் மட்டுமே வழங்கப்படும்.

இந்த விதிகள் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்து இறங்கி மின்சார ரெயில்களில் பயணம் செய்யும் ஆண்களுக்கும் அடையாள அட்டை மற்றும் நிறுவனத்தின் அனுமதி கடிதத்துடன், அலுவலகங்களுக்கு செல்லும் ஆண்களுக்கும் பொருந்தாது.

அபராதம் :

மின்சார ரெயிலில் பயணிகள் அனைவரும் முககவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்காவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 மாதத்திற்கு பிறகு மின்சார ரெயில் சேவை முழு அளவில் தொடங்கி உள்ளது. அதில் பெண்கள், குழந்தைகளுடன் உற்சாகமாக பயணம் செய்தனர். பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருப்பதால் மாணவர்கள் பயணிக்க அனுமதி இல்லை.

நெரிசல் மிக்க காலை மற்றும் மாலை நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு சேவையும், மற்ற நேரங்களில் 15 நிமிடத்திற்கு ஒரு சேவையும் விடப்பட்டுள்ளது. 

வழக்கமான கூட்டம் :

மின்சார ரயில் பயணத்திற்கு தளர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, ரயில் நிலையங்களில் வழக்கமான கூட்டம் காணப்பட்டது. சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், கடற்கரை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பயணிகளை அதிகளவில் காணமுடிந்தது.

630 ரயில்கள் :

கொரோனா பாதிப்புக்கு முன்பு வரை தினமும் 660 மின்சார ரெயில் சேவை இயக்கப்பட்டது. தற்போது, 630 ரயில்கள் விடப்பட்டுள்ளன. இயல்பு நிலை அளவுக்கு சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி, தற்போதுள்ள கட்டுப்பாடுகள் வரும் காலங்களில் தளர்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
*

Share this story