மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய்.! எப்போது.? முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு..

By 
c1000c

பள்ளிக் கல்வித் துறை சார்பில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற வைத்த அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குப் பாராட்டு.  பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு. தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு TAB வழங்குவது உள்ளிட்ட  ஐம்பெரும் விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய அவர்,  

தேர்வு முடிவுகள் வந்ததும், நானே நம்முடைய அமைச்சர் மகேஸ் அவர்களுக்கு ஃபோன் செய்து, “தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்ததும், நான் கலந்துகொள்ளும் முதல் அரசு விழாவாக, இந்தப் பாராட்டு விழாதான் இருக்கவேண்டும். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்”என்று சொல்லியிருந்தேன். அதன்படி, இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளதாக கூறினார். 

இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதற்கு முன்பு மாணவர்களுக்காக நம்முடைய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களைப் பற்றி கேட்டபோது, பள்ளிக் கல்வித் துறையில் இருந்து ஒரு பெரிய பட்டியலே வந்தது. அதில் மிக முக்கியமான சில திட்டங்களின் பெயரை மட்டும் சொல்ல வேண்டும் என்றால், 16 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் “காலை உணவுத் திட்டம்”, 27 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் “இல்லம் தேடிக் கல்வி”, 28 இலட்சம் மாணவர்களுக்கு திறன்பயிற்சி வழங்கி வரும் “நான் முதல்வன்”,  23 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் “எண்ணும் எழுத்தும் திட்டம்”, 30 இலட்சம் மாணவர்கள் பயனடையும் “வாசிப்பு இயக்கம்”, “மாணவர் மனசு” என்ற பெயரில் “ஆலோசனைப் பெட்டி”, 23 இலட்சம் பெற்றோர்களை உள்ளடக்கிய “பள்ளி மேலாண்மைக் குழுக்கள்”, அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காக “நம்ம ஸ்கூல்-நம்ம ஊரு பள்ளி” திட்டம், “நடமாடும் அறிவியல் ஆய்வகம்”, “வானவில் மன்றம்”, 

அதிலும் மாணவிகளுக்கு மாதா மாதம் ரூ.1000/- வழங்குகிற மற்றொரு முக்கியமான திட்டம் இருக்கிறது! அதுதான் “புதுமைப்பெண் திட்டம்”.  எனக்கு மாணவிகளிடம் இருந்து வந்த கடிதங்களாக இருந்தாலும், இந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது நான் சந்தித்த மாணவிகளாக இருந்தாலும், பலரும் இந்த “புதுமைப்பெண்” திட்டத்தை மிகவும் பாராட்டிப் பேசினார்கள். மாணவிகள் தங்களின் சிறிய சிறிய தேவைகளுக்கு யாரையும் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை இனி இல்லை என்றும், இந்த திட்டத்தில் மாதா மாதம் கிடைக்கும் ஆயிரம் ரூபாய் தங்களின் தேவைக்கு உதவியாக இருப்பதாகவும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

அந்த மகிழ்ச்சி மாணவர்கள் முகத்திலும் ஏற்பட வேண்டும் என்பதற்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற “தமிழ்ப்புதல்வன் திட்டம்” செயல்படுத்தப்படும் என்று சொல்லியிருந்தேன். நீங்கள் கல்லூரி  சென்றவுடனே வருகின்ற ஆகஸ்ட் மாதத்திலிருந்து அந்த ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என இந்த மேடையில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

நம்முடைய பள்ளி மாணவ, மாணவியர்களை வெளிநாடு சுற்றுலாவுக்கும் அதிகஅளவில் அழைத்துக்கொண்டு செல்கிறார். தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்தும் முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுக்கிறார்.  இப்படிப்பட்ட முன்னெடுப்புகளுக்கு அவருக்குத் துணையாக நிற்பது ஆசிரியர்கள்தான். அந்த ஆசிரியர்களைப் பாராட்ட வேண்டியது அரசினுடைய கடமை! 

ஜூன் 10 பள்ளிகள் திறந்தபோது, நான் போட்ட சமூக வலைத்தளப் பதிவில் கூட மாணவர்களின் மனநலனுடன் உடல்நலனும் முக்கியம் என்று சொல்லியிருந்தேன். அதற்கு விளையாட்டு மிகவும் முக்கியமான ஒன்று. இந்த பதக்கம் பெற்றவர்கள், அடுத்து, உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்கவேண்டும். தம்பி உதயநிதி முன்னெடுப்பில்,

விளையாட்டிற்காக அதிகமான திட்டங்களை நம்முடைய அரசு செயல்படுத்திக் கொண்டு வருகிறது. அதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்களில் இருந்து பல ஒலிம்பிக் சாம்பியன்கள் உருவாகவேண்டும் என்று வாழ்த்துகிறேன். இப்போது எல்லாமே இணையதளத்தில் இருக்கிறது. A.I. என்று சொல்லும் செயற்கை நுண்ணறிவு இப்போது பெரிய பேசும்பொருளாக ஆகியிருக்கிறது. புதிய வளர்ச்சிகளுக்கேற்ப நம்மை 'அப்டேட்' செய்துக்கொள்வது மிகவும் முக்கியம். கல்விதான் உங்களிடமிருந்து யாராலும் திருட முடியாத ஒரே சொத்து. ஆனால், அதிலும் கூட, மோசடிகள் செய்வதை “நீட்” போன்ற தேர்வு முறைகளில் பார்க்கிறோம்.

அதனால்தான் அதை கடுமையாக எதிர்த்து வருகிறோம். “நீட்” போன்ற தேர்வுகள் மோசடியானவை என்று முதன்முதலில் கூறியது தமிழ்நாடுதான். அதை இன்றைக்கு இந்தியாவே சொல்லத் தொடங்கி இருக்கிறது. இந்த மோசடிக்கு நிச்சயம் ஒரு நாள் முடிவுகட்டுவோம். அது எங்கள் பொறுப்பு. மாணவச் செல்வங்களான நீங்கள் படிக்க சமூகமோ, பொருளாதாரமோ, அரசியல் சூழ்நிலையோ எதுவுமே தடையாக இருக்கக் கூடாது. அதுதான் என்னுடைய எண்ணம். அதுதான் இந்த திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை! என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Share this story