சாட்டிலைட் புகைப்படத்தில் ராமர் பாலம்.! - ஐரோப்பிய ஏஜென்ஜி வெளியிட்ட ஹெச்.டி. போட்டோ வைரல்..

By 
ramt1

ராமேஸ்வரம் தீவுக்கும் இலங்கையின் மன்னார் தீவுக்கும் இடையே இருக்கும் ராமர் பாலத்தைக் காட்டு சாட்டிலைட் படத்தை ஐரோப்பிய நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்தப் படம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இந்தியா - இலங்கை இடையே கடலுக்கடியில் 48 கிலோ மீட்டர் தொலைவுக்கு ராமர் பாலம் அமைந்துள்ளது. இந்தியாவில் ராமேஸ்வரம் தீவில் இருந்து, இலங்கையின் மன்னார் தீவுக்கு இடையே இந்த பாலம் அமைந்துள்ளது. இந்த ராமர் பாலத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் கோப்பர்நிக்கஸ் சென்டினெல் - 2 செயற்கைக்கோள் புகைப்படம் எடுத்துள்ளது.

கோப்பர்நிக்கஸ் சென்டினெல் - 2 விண்வெளியில் இருந்து பூமிக்கு அனுப்பிய புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டிருக்கிறது. படத்தில் ராமர் பாலத்தின் மண் பகுதியை காண முடிகிறது. இந்தப் பகுதியில் கடலின் ஆழம் ஒன்று முதல் 10 மீட்டர் வரை தான் உள்ளது என ஐரோப்பிய ஏஜென்சி தெரிவித்துள்ளது.

ராமர் பாலம் என்று சொல்லப்படும் இந்தப் பகுதி எப்படி உருவானது என பல கோட்பாடுகள் கூறப்படுகின்றன. புவியியல் சான்றுகள் அடிப்படையில், இந்தப் பகுதியில் உள்ள சுண்ணாம்புக் கற்கள் ஒரு காலத்தில் இந்தியாவை இலங்கையுடன் இணைத்த நிலப்பகுதியின் எச்சங்கள் எனக் கூறப்படுகிறது.

இந்தப் பாலத்தை ராமாயணத்துடன் தொடர்புபடுத்தி கூறப்படும் கதைகளும் உண்டு. ராமர் இலங்கைக்குச் செல்வதற்காகக் கட்டிய பாலம் இது என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. இதனால்தான் இந்தப் பகுதி ராமர் பாலம் என்று சொல்லப்படுகிறது.

Share this story