3-வது டோஸ் தடுப்பூசி போட வேண்டுமா? : பேரவையில் அதிகாரப்பூர்வ தகவல்

By 
Should the 3rd dose be vaccinated  Official information in the Assembly

கொரோனாவுக்கு எதிராக இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போடுவதின் அவசியம் குறித்து, சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, டாக்டர் சி.விஜயபாஸ்கர் (அ.தி.மு.க.) ஆகியோர் சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்திருந்தனர்.

இதுபற்றி, டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது :

கொரோனா தொற்று தொடங்கிய நாள் முதல், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவை தடுக்க தடுப்பூசி அவசியம் என்பதால், தமிழகத்தில் 3 கோடிக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு, கோவேக்சின் இரண்டு டோஸ் போட்டவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி ஒரு ஆண்டு இருக்கும் என மருத்துவ வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி வைசி கூறுகையில், 2-வது டோஸ் தடுப்பூசி போட்டு முடித்தவர்களுக்கு 3-வது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு, வருகிற 20-ந்தேதிக்குள் அனுமதி பெற முயற்சி எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

பூஸ்டர் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு இன்னும் வராவிட்டாலும், இதில் தமிழக அரசு எடுக்கும் முயற்சி என்ன? மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்பது பற்றி விளக்க வேண்டும்' என்றார். 

இதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது :

மத்திய அரசின் வழி காட்டுதலின்படி கொரோனா தடுப்பூசி  குறித்து ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. 

2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடுவது குறித்து, அந்த குழு செயல்முறை எதையும் மத்திய அரசுக்கு அளிக்காத நிலையில் 3-வது டோஸ் பூஸ்டர் இந்திய அளவில் எங்கும் தொடங்கவில்லை.

தமிழகத்தில் 2-வது டோஸ் தடுப்பூசி வேகமாக போடப்பட்டு வருகிறது. ஆகஸ்டு மாதத்தில் இருந்து தடையின்றி தடுப்பூசி வருகிறது. 

ஜனவரி 16-ந்தேதியில் இருந்து தடுப்பூசி வந்தாலும், நேற்று தான் அதிகபட்சமாக 19 லட்சத்து 22 ஆயிரத்து 80 தடுப்பூசி ஒரே நாளில் தமிழகத்துக்கு வந்துள்ளது.

கேரளாவில் கொரோனா தொற்று ஒரு மாதமாக 20 ஆயிரத்துக்கும் குறையாமல் உள்ளது. 

இதனால், கேரள-தமிழக எல்லையோர மாவட்டங்களில் மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போட முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

ஒரே நாளில், 20 லட்சம் இலக்கு வைத்து தடுப்பூசி போட கூறியுள்ளார். நேற்று முன்தினம் மட்டும் 6 லட்சத்து 20 ஆயிரத்து 255 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

வருகிற 12-ந்தேதி எல்லையோர 9 மாவட்டங்களிலும் 10 ஆயிரம் முகாம்கள் அமைத்து 20 லட்சம் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2 டோஸ் தடுப்பூசி போட்டலே 97.5 சதவீத நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகிறது. 2 தடுப்பூசி போட்ட பிறகு இறப்பு சதவீதம் இல்லாத நிலை உள்ளது. 

2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு, கொரோனா தொற்று அங்ககொன்று இங்கொன்றுமாக இருந்தாலும், இறப்பு என்பது இல்லை.

எனவே, 3-வது பூஸ்டர் டோஸ் போடும் நிலை தமிழ்நாட்டில் இல்லை. இந்தியாவில் இல்லை. உலகில் எங்கும் இல்லை. 

அப்படி ஏதாவது 3-வது டோஸ் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகரிக்கும் பட்சத்தில், தமிழகத்தில் முதலில் அந்த பணி தொடங்கும்' என்றார்.

Share this story