எஸ்ஐ வெட்டிக்கொலை : குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்..
 

SI murder guilty plea confession ..

திருச்சி மாவட்டம், நாவல்பட்டு போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கைதான மணிகண்டன் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது :

கைதான மணிகண்டன் ஆடுகளை திருடி விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டவர். ஆடுகளை சமயபுரம் ஆட்டுச்சந்தை உள்ளிட்ட சந்தைகளிலும், இறைச்சி கடைகளிலும் விற்று வந்துள்ளார். 

இதற்கு துணையாக, உறவுமுறையான 14 வயது சிறுவனையும் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். பல இடங்களில் திருடியும் இதுவரை அவர் போலீசாரிடம் சிக்காமல் இருந்துள்ளார். 

இந்த நிலையில்தான், சம்பவத்தன்று தோகூரில் ஒரு ஆட்டை திருடிக்கொண்டு, மோட்டார் சைக்கிளில் மூன்று பேராக வந்துள்ளனர். 

அப்போது, போலீசார் வழிமறித்தபோது வண்டியை நிறுத்தாமல் வேகமாக தப்பித்து சென்றிருக்கின்றனர். 

அதேநேரத்தில், வண்டியில் இருந்த 2 சிறுவர்களையும் ஆட்டை இறுக பிடித்துக்கொண்டு இருக்க கூறியிருக்கிறார்.

சுரங்கப்பாதையில் தண்ணீர் இருந்ததால், தப்பிச் செல்ல வழியில்லாமல் சிக்கிக்கொண்டனர். மணிகண்டனின் தாய்க்கு, சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் போன் செய்து தகவல் தெரிவித்ததால், கைதாகி சிறைக்கு சென்றுவிடுமோ? என மணிகண்டன் அச்சமடைந்துள்ளார். 

அப்போதுதான் கல்லால் பூமிநாதனின் தலையில் தாக்கியும், மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த அரிவாளை எடுத்தும் அவரது தலை, கழுத்தில் பலமாக வெட்டியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் அவர் சாய்ந்ததும் மற்ற 2 சிறுவர்களும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். கொலை செய்த உடன் அதே மோட்டார் சைக்கிளில் 3 பேரும் தப்பிச் சென்றனர்.

மணிகண்டனின் உறவினர் ஒருவர் இறந்த துக்க காரிய நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டியிருந்ததால், செலவுக்காக ஒரு ஆட்டை திருடியிருக்கின்றனர். அந்த ஆட்டை கீரனூர் பகுதியில் ஒருவரிடம் மணிகண்டன் விற்றிருக்கிறார்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
*

Share this story