ரூ.24 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் கடத்திய பாடகி கைது..
 

By 
bop

அமெரிக்காவை சேர்ந்தவர் ரக்குவெல் டொலொ ரஸ் அன்டியோலா (வயது 34) சிறந்த ராக் இசை பாடகியான இவர் சமூகவலை தளங்களிலும் பிரபலமாக உள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை 1 லட்சத்து 19 ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர்.

இதேபோல அமெரிக்காவில் மாடல் அழகியாக இருந்து வருபவர் மெலிசா டுபோர் (30) இவர் டிசைனர் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

சம்பவத்தன்று டொலொ ரஸ் அன்டியோலாவும், மெலிசா டுபோரும் விலை உயர்ந்த காரில் ஒரு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு ஹூஸ்டன் நகரில் இருந்து அலபாமா நகருக்கு சென்று கொண்டு இருந்தனர். 2 பேரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்கள் சென்ற காரை வழிமறித்து சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையின் போது காரின் பின்புற பகுதியில் பலகை மூலம் ரகசிய அறை அமைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த ரகசிய அறையில் பண்டல், பண்டலாக கொகைன் என்ற போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மொத்த மதிப்பு ரூ.24 கோடியே 73 லட்சம் ஆகும். இது தொடர்பாக போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

Share this story