கெட்டுப்போன மெத்தனால்.! முன்பே கண்டறிந்த சாராய வியாபாரி.! - சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி தகவல்..

By 
kurichi1

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து இதுவரை 52 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இவ்வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் கடந்த 18-ம் தேதி சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷ சாராயத்தை வாங்கி 140க்கும் மேற்பட்டோர் வாங்கி குடித்த நிலையில் இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர். 90க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம், சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

இந்நிலையில் முதற்கட்ட விசாரணையில் மெத்தனால் கலந்து விஷ சாராயத்தை அருந்தியதால் உயிரிழப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இவ்வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக 5 தனிப்படை அமைக்கப்பட்டு கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக  கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, அவரது தம்பி தாமோதரன், உறவினர் ஜீவா உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சின்னதுரை என்ற நபர் தான் மெத்தனாலை வழங்கி இருப்பது தெரியவந்தது.  இதனையடுத்து தலைமறைவாக இருந்த சின்னதுரையை கடலூரில் வைத்து தனிப்படை போலீசார்  கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாதேஷ் என்ற நபரிடம் மெத்தனாலை வாங்கி வந்தது தெரியவந்தது. இந்த மாதேஷ் என்பவர் ஆந்திராவில் இருந்து மெத்தனாலை வாங்கி வந்து சின்னதுரையில் விற்பனை செய்துள்ளார். குறிப்பாக கடந்த 17ம் தேதி மாதேஷ் என்ற நபரிடம் இருந்து சின்னதுரை மெத்தனாலை வாங்கியுள்ளார். மெத்தனால் அடங்கிய 60 லிட்டர்  4 டியூப்கள், 30 லிட்டர் 3 டியூப்கள், 100 சிறிய பாக்கெட்டுகளை சின்னதுரையிடம் கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ் வாங்கினார். கோவிந்தராஜின் சகோதரர் தாமோதரன் முதலில் குடித்து பார்த்து மெத்தனால் கெட்டு போய் இருப்பதாக கூறியுள்ளார். அதற்கு சின்னதுரை என்பவர் மெத்தனால் கேட்டு போகவில்லை உயர் தர சரக்கு என்று விற்பனை செய்யுங்கள் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறியதை அடுத்து இதை விற்றுள்ளனர். 

குறிப்பாக கோவிந்தராஜ்க்கு சாராயம் குடிக்கும் பழக்கம் இல்லாததால் அவரது சகோதரர் தாமோதரனே எப்போதும் சிறிதளவு குடித்து பார்த்து வாங்குவார் என்பதும்  விசாரணையில் தெரியவந்துள்ளது. எப்போதும் முழு பணத்தை பெற்றுக்கொண்டே  சின்னதுரை மெத்தனாலை விற்று வந்த நிலையில் கடந்த 17ம் தேதி கெட்டுப்போன மெத்தனாலை கொடுக்கும் போது முன்பணம் மட்டுமே பெற்றுள்ளார். சின்னதுரை மெத்தனால் விற்பனை வரலாற்றில் முதல் முறையாக முழு பணத்தை வாங்காமல் முன்பணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு மெத்தனாலை கொடுத்ததும் தெரியவந்துள்ளது. 

சின்னதுரை மெத்தனாலை மாதேஷிடம் பெற்றதும் மாதேஷ் ஆந்திராவில் இருந்து செயல்படாத கெமிக்கல் நிறுவனங்கள் மற்றும் காலாவதியான கெமிக்கல் நிறுவனங்களிடம் இருந்து இந்த மெத்தனாலை வாங்கி வந்து சின்னதுரையிடம் விற்பனை செய்துள்ளார். சின்னதுரை அளித்த தகவலின் அடிப்படையில் புதுச்சேரியை சேர்ந்த மாதேஷ் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

மேலும் சின்னதுரையின் நண்பர்களான சங்கராபுரத்தை  சேர்ந்த ஜோசப் ராஜா, புதுச்சேரியை சேர்ந்த மதன்குமார்  7 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். சிபிசிஐடி போலீசார் அவர்களிடம் கைப்பற்றிய அந்த மெத்தனால் அடங்கிய டியூப்களை தடவியல் துறைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் மாதேஷ் ஆந்திராவில் காலாவதியான மற்றும் எந்தெந்த செயல்படாத நிறுவனங்களிடம் இருந்து மெத்தனாலை வாங்கி இருக்கிறார் என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். விசாரணைக்கு பிறகே இதன் பின்னணியில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது தெரியவரும். 

Share this story