ராஜபக்சே சகோதரர்களே காரணம்: இலங்கை உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..

By 
pakse

இலங்கையில் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்களான கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே மற்றும் பாசில் ராஜபக்சே ஆகியோர்தான் காரணம் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா (TISL) என்ற நிறுவனம் 13 முன்னாள் அதிகாரிகளுக்கு எதிராக தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்திய இலங்கை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. அப்போது, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்களும் மற்றவர்களும்தான் காரணம் என்று தெரிவித்துள்ளது.

"அவர்களின் நடவடிக்கைகள், புறக்கணிப்புகள் மற்றும் நடத்தை ஆகியவைதான் நெருக்கடிக்கு காரணம்" என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் தீர்ப்பில் அவர்களுக்கு எந்த தண்டனையும் அளிக்கப்படவில்லை.

இரண்டு ராஜபக்ச சகோதரர்கள், இரண்டு முன்னாள் மத்திய வங்கி ஆளுநர்கள் மற்றும் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் மீது மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

"குடிமக்களின் வாழ்க்கையில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் பொது அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் இருக்க இது எச்சரிக்கையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என மனுத்தாக்கல் செய்த TISL நிர்வாக இயக்குனர் நடிஷானி பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் 7.8 சதவீதம் சரிவு கண்டது. நீண்ட நேர மின்வெட்டு, உயர்ந்து வரும் பணவீக்கம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, அதிக வட்டி விகிதங்கள் ஆகியவற்றால் 70 ஆண்டுகளில் இல்லாத மோசமான நிதி நெருக்கடி ஏற்பட்டது. தற்போது அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான இலங்கை அரசு ஐ.நா.வின் கடன் உதவியைப் பெற்று நாட்டை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Share this story