போதைப் பொருள் விற்பனையை தடுக்க, கடும் தண்டனை : முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு

By 
 Strict punishment to stop drug trafficking Chief Minister's Action Notice

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ‘தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்க, அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு :

இந்த அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து 29.8.2021 வரை தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பாக, கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை விற்பவர்கள், கடத்துபவர்கள் ஆகியோர் மீது 10,673 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 11,247 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இவர்களிடம் இருந்து 149.43 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 113 நான்கு சக்கர வாகனங்களும், 106 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்றது மற்றும் கடத்தியது தொடர்பாக 2,458 வழக்குகள் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் பதிவு செய்யப்பட்டு 5,793 கிலோ கஞ்சா மற்றும் இதர போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

3,413 பேர் கைது செய்யப்பட்டு, அதில் 81 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

போதைப்பொருட்கள் விற்பனை செய்வோர் மற்றும் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதை பொருள் விற்பனையும் முற்றிலும் தடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜி.கே.மணி : போதை பொருள் உற்பத்தி செய்வது, கடத்தி வருவது, விற்பனை செய்வது என்பது மாபெரும் குற்றமாகும். முதலமைச்சர் சொன்னதுபோல் இதை, தடை செய்தாலும், தடுப்பு நடவடிக்கை எடுத்தாலும் கூட பள்ளி, கல்லூரிகள், மாணவ-மாணவிகள் விடுதிகள் முன்பு விற்கப்படுகிறது.

சென்னை மெரினா கடற்கரையில், பொதுமக்கள் கூடும் இடங்களில் எல்லாம் வறுமையின் காரணமாக, இளைஞர்களை வைத்து போதைப்பொருட்களை விற்கிறார்கள். 

குறிப்பாக பான் மசாலா, கஞ்சா, குட்கா போன்ற நிறைய போதைப்பொருட்கள் வட மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்டு தமிழ்நாட்டில் விற்கப்படுகிறது. பதுக்கியும் வைக்கப்படுகிறது.

இதை மாணவ-மாணவிகள் பயன்படுத்துவதால், நாளடைவில் அடிமையாகி விடுகிறார்கள். இது சமுதாயத்தையே சீரழிக்கும் நிகழ்வாக தொடர்கிறது. 

எனவே, தடை நடவடிக்கை என்பது போதாது. இதற்காக 1985-ம் ஆண்டுக்கான தடைச் சட்டம் இருக்கின்றது.

இந்த தடைச்சட்டத்தில், மேலும் திருத்தங்கள் கொண்டுவந்து முற்றிலுமாக ஒழிப்பதற்கு, அரசு முன்வர வேண்டும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : ஏற்கனவே போதை மற்றும் மனமயக்க பொருட்கள் தடைச் சட்டம் 1985-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலேயே போதைப் பொருட்கள் விற்பனை செய்வோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்க, அந்த சட்டத்திலே புதிய திருத்தங்கள் கொண்டு வரப்படும். 

புதிய திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு, உரிய நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும்.

ஜி.கே.மணி : இந்த பணியில் ஈடுபடும் போலீசார் மிகப்பெரிய சவால்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. அவர்களை ஊக்கப்படுத்த ஊக்க ஊதியம் மற்றும் ரிஸ்க் அலவன்ஸ் வழங்கப்படுமா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : காவல்துறையினரை ஊக்குவிக்க நிச்சயம் இந்த அரசு தயங்காது. இதுகுறித்து பரிசீலித்து, ஆராய்ந்து, என்னென்ன வகையிலே அவர்களுக்கு சிறப்பு செய்ய வேண்டுமோ, அதைப் பரிசீலித்து, அவர்களுக்குரிய ரிவார்டு நிச்சயம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Share this story