தமிழகத்தில் 15 மாவட்டங்களில், திடீரென கொரோனா பாதிப்பு அதிகரிப்பு : முழு விவரம்..

By 
Sudden increase in corona infection in 15 districts of Tamil Nadu Full details ..

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் வேகம் கடந்த மே மாதம் மிகவும் அதிகமாக காணப்பட்டது.

கொரோனா பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நோயின் தாக்கம் வேகமெடுத்தது.

கடந்த மே மாதம் 3-வது வாரத்தில் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் வகையில் தினசரி பாதிப்பு இருந்து வந்தது. ஒவ்வொரு நாளும் பாதிப்பு 30 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகிக் கொண்டே வந்தது. அந்த வகையில் கடந்த மே மாதம் 21-ந்தேதி அன்று அதிகபட்சமாக 36,184 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருந்தது.

இப்படி மே மாதம் முழுவதும் கட்டுக்குள் வராமல் இருந்த கொரோனா தொற்று ஜூன் மாதத்தில் இருந்து மளமளவென குறைந்தது.

கடந்த மாதம் முழுவதுமே கொரோனா தினசரி பாதிப்பு இறங்கு முகமாகவே இருந்தது.

ஜூன் 1-ந்தேதி அன்று தினசரி பாதிப்பு 26,513 ஆக இருந்தது. இது ஒரு வாரத்தில் மேலும் குறைந்தது. 7-ந்தேதி அன்று தினசரி பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் கீழே சென்றது. அன்று 19,448 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருந்தது.

கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டம் குறைந்ததால், நோயின் வேகமும் குறைந்தது. 

இதன்படி, கடந்த மாதம் 2-வது வாரத்தில் தினசரி பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. கடந்த மாதம் 17-ந்தேதி அன்று 9,118 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருந்தது.

இப்படி சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று  குறைந்துள்ள நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், மக்கள் நடமாட்டம் அனைத்து இடங்களிலும் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா தினசரி பாதிப்பு நேற்று முன்தினம் இருந்ததை விட நேற்று 15 மாவட்டங்களில் கொஞ்சம் அதிகரித்துள்ளது. எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பாதிப்பு அதிகரித்துள்ளது என்பது பற்றிய விவரம் வருமாறு :

(அடைப்பு குறிக்குள் இருப்பது நேற்று முன்தினம் (ஜூலை 1-ந்தேதி பாதிப்பு).

1. கள்ளக்குறிச்சி-128 (115)

2. காஞ்சிபுரம்-71 (68)

3. கரூர்- 46 (32)

4. மதுரை-94 (68)

5. நீலகிரி-90 (87)

6. பெரம்பலூர்-29 (22)

7. புதுக்கோட்டை-73 (66)

8. ராமநாதபுரம்-19 (14)

9. விழுப்புரம்-70 (65)

10. சிவகங்கை-66 (65)

11. தென்காசி-29 (28)

12. தஞ்சை-248 (197)

13. தேனி-48 (45)

14. திருப்பத்தூர்-32 (31)

15. கடலூர்-127 (102)

இந்த 15 மாவட்டங்களில் தஞ்சையில் மட்டும் நேற்று ஒரே நாளில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

நேற்று முன்தினம் தஞ்சை மாவட்டத்தில் 197 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. நேற்று இந்த எண்ணிக்கை 248 ஆக உயர்ந்துள்ளது. 

இதையடுத்து, அந்த மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது.

வெளி மாவட்டங்கள் சிலவற்றில் நோய் தொற்று இதுபோன்று சற்றே அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து கொண்டே செல்கிறது. 

சென்னையில் நேற்று முன்தினம் தினசரி பாதிப்பு 207 ஆக இருந்தது. அது இன்று 198 ஆக குறைந்துள்ளது. இதே போன்று, கோவையில் 514 ஆக இருந்த பாதிப்பு 498 ஆகவும், ஈரோட்டில் 420 ஆக இருந்த பாதிப்பு, 411 ஆகவும் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story