பிறந்த நாள் கொண்டாடிய 2 மணி நேரத்தில் குடும்பத்தோடு தற்கொலை..

மதுரை மாநகர் நரிமேடு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வீதி பகுதியில் உள்ள பூமி உருண்டை தெருவில் வசித்து வந்தவர் காளிமுத்து (வயது 42). கார்ப்பென்டராக பணிபுரிந்து வந்தார். அதன்படி பல்வேறு ஒப்பந்த பணிகளை எடுத்து மரவேலைகளை பார்த்துவந்தார். இவர் தனது மனைவி ஜாக்லின் ராணி (36) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு மதுமிதா (12) என்ற மகள் இருந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காளிமுத்துவின் மனைவிக்கு பிறந்தநாள் என்பதால் மகள் மதுமிதாவும் பள்ளிக்கு செல்லாமல் குடும்பத்துடன் காலை 11 அளவில் கேக் வெட்டி ஊட்டிவிட்டு உற்சாகமாக கொண்டாடியுள்ளனர். மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு காளிமுத்து வாட்ஸ்அப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஸ்டேடஸ் வைத்துள்ளார். இதனையடுத்து சிறிதுநேரத்தில் காளிமுத்து வீட்டில் இருந்து கிளம்பி சென்றுள்ளார்.
இதையடுத்து காளிமுத்து கூடல்நகர் ரயில்வே நிலையத்திற்கு சென்று அங்கு தண்டவாளத்தில் நின்றபடி திடிரென அவரது வாட்ஸ் அப் ஸ்டேடசில் விடைபெறுகிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் முதன்முறையாக காளிமுத்து தனது வாட்ஸ்அப் ஸ்டேடசில் மனைவி மற்றும் மகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படத்தை வைத்துள்ளார்.
இதனை பார்த்த காளிமுத்துவின் உறவினர்கள் ஸ்டேடஸ் குறித்து சந்தேகமடைந்து காளிமுத்துவின் மனைவிக்கு போன் செய்த நிலையில் அவர் எடுக்கவில்லை இதனையடுத்து எதிர் வீட்டில் உள்ளவர்களிடம் காளிமுத்துவின் மனைவி மற்றும் மகளிடம் பேச வேண்டும் என்றபோது அருகில் உள்ளவர்கள் வீட்டுகதவை தட்டியுள்ளனர். அப்போது வீடு உள்பக்கத்தில் பூட்டப்பட்டிருந்த நிலையில் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது காளிமுத்துவின் மனைவி ஜாக்குலினும் மகள் மதுமிதாவும் தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து செல்லூர் காவல்நிலையத்திற்கு அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான காவல்துறையினர் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். மனைவியின் பிறந்தநாளில் மனைவி, மகளுடன் கேக்வெட்டி பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடிய சில மணி நேரத்தில் 3 பேரும் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்கொலைக்கான காரணம் குறித்து செல்லூர் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் உயிரிழந்த காளிமுத்து வீடு கட்டும் பணிக்காக வாங்கிய கடனால் கணவன் - மனைவி இடையே அவ்வபோது வாக்குவாதம், பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்தது தெரியவந்துள்ளது. காளிமுத்துவின் உடலை கூடல்புதூர் காவல்துறையினர் கூடல்நகர் ரயில் தண்டவாளத்தில் இருந்து மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மனைவியின் பிறந்தநாளில் வைத்த ஸ்டேடஸ் நேரம் முடிவதற்குள் குடும்பமே தற்கொலை மூலமாக இறந்தநாளாக மாற்றி மரணத்தை தேடிக்கொண்ட சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.