காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் அதிரடி முடிவு

காவிரி நதிநீர் பங்கீட்டில் கர்நாடக அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வருகிறது. இந்த நிலையில், நடப்பாண்டு ஆகஸ்டு மாதத்துக்கான நதிநீர் பங்கை கர்நாடகம் வழங்க மறுப்பதாக கூறி சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் ஆகஸ்டு 14-ந்தேதி மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை கடந்த ஆகஸ்டு 25-ந்தேதி தேதி விசாரித்த சுப்ரீம்கோர்ட் காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 1-ந்தேதி ஒத்தி வைத்திருந்தது. அதன்பிறகு வழக்கு செப்டம்பர் 1-ந்தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டதால் தமிழக அரசின் தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் முறையிடப்பட்டது. அப்போது, நீதிபதிகள் அமர்வு, இந்த விவகாரம் செப்டம்பர் 6-ந்தேதி விசாரிக்கப்படும் என கூறி இருந்தனர்.
இந்த நிலையில் செப்.6-ந்தேதி சுப்ரீம்கோர்ட்டில் விசாரிக்கப்படும் வழக்குகள் பட்டியலில் இந்த விவகாரம் இடம் பெற்றிருந்தது. ஆனால், அந்த அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி பி.எஸ். நரசிம்மா விடுமுறையில் இருந்ததால், அந்த வழக்கு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு முன் இந்த விவகாரத்தை தமிழகத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் குறிப்பிட்டு உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.
அப்போது, நீதிபதி பி.ஆர்.கவாய் செப்.21-ந்தேதி இந்த விவகாரம் விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என்று கூறி இருந்தார். அதன்படி இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது. நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகளுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க மறுப்பு தெரிவித்தனர். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் 15 நாட்களுக்கு ஒரு முறை கூடி சூழலை ஆராய்ந்து வருகிறது. மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகள் மற்றும் பரிந்துரைகளை கர்நாடக அரசு அமல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதேவேளையில் காவிரியில் 24 ஆயிரம் கன அடி நீரை திறக்க கோரும் தமிழ் நாடு அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உள்ளது. வறட்சி கால அட்டவணைப்படி தமிழ்நாட்டுக்கான உரிய நீரை கர்நாடகா திறக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.