மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் ரூ.1,000: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் ரூ.1,000 வரும் 14ல் பயனளாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கேட்டு 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்திருந்தது. அதில், தகுதியுள்ளவர்கள் என 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கடந்த மாதம் முதல் ரூ.1000 வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
ரூ.1000 உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்து, அவர்களது கோரிக்கைகள் ஏற்கப்படாமல் திருப்பி அனுப்பிய விண்ணப்பதாரர்களுக்கு, ‘‘உங்களது கோரிக்கையை எங்களால் ஏன் ஏற்க முடியவில்லை’’ என்பதற்கான காரணத்தை குறிப்பிட்டு அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணி கடந்த மாதம் 18ம் தேதி முதல் நடந்தது.
அதன்படி, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட சுமார் 57 லட்சம் பேருக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த 57 லட்சம் பேரும் அரசுக்கு சரியான காரணத்தை மீண்டும் சொன்னால் அவர்களின் மனு ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 கேட்டு, சுமார் 7 லட்சம் பேர் வரை நேற்று வரை அரசுக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளனர்.
ரூ.1000 பெற தகுதி இருந்தும், ஏற்கனவே விண்ணப்பித்து இருந்து, அந்த மனு நிராகரிக்கப்பட்டு இருந்தால் வருகிற 18ம் தேதி வரை மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் ரூ.1,000 வரும் 14ல் பயனளாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இம்மாதம் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒருநாள் முன்னதாகவே வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.