டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க, தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்..

By 
tengu

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுடன் பருவகாலத்தில் பரவும் இன்புளூயன்சா தொற்றும் தீவிரமடைந்து வருவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுமாறு பொது சுகாதாரத் துறை வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட பொது சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மருத்துவ துறையினர், சுகாதார பணியாளர்கள் முகக்கவசம் அணிதல் கட்டாயம். பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் மூன்றடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும். பருவ கால தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் நோயின் தீவிரத்தை பொருத்து நோயாளிகளை வகைப்படுத்தி கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

புதுவையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகமாக உள்ளது. டெங்கு பாதிப்பினால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இது புதுவை மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி தனது அலுவலகத்தில் டெங்கு காய்ச்சலை தடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், கலெக்டர் வல்லவன், சுகாதாரத்துறை செயலாளர் முத்தம்மா, இயக்குனர் ஸ்ரீராமுலு ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது புதுவையில் டெங்கு பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்கினார்கள். புதுவை அரசு ஆஸ்பத்திரியில் தனிவார்டு தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளிடம், டெங்கு பரவலை தடுக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கையை துரிதப்படுத்தவும், வீடுவீடாக சென்று ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.

மேலும் காய்ச்சல் இருந்தால் உடனடியாக டாக்டர்களை அணுக அறிவுறுத்தவும், கொசுவை ஒழிக்க மருந்து தெளிக்கவும், அனைத்து ஆஸ்பத் திரிகளிலும் போதிய மருந்துகளை கையிருப்பு வைக்கவும் உத்தரவிட்டார். அதோடு டெங்கு காய்ச்சல் தொடர்பாக தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் விவரங்களை சுகாதாரத்துறைக்கு உடனடியாக தெரிவிக்க சுற்றறிக்கை அனுப்புமாறும் அறிவுறுத்தினார்.

இதற்கிடையே கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு நடத்தினார். டெங்கு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டார்.
 

Share this story