கோவில் சொத்துகள் கூட்டு சதி மூலம் அபகரிக்கப்படுகின்றன : பிரதமர் மோடி பேச்சு 

By 
modi18

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தமிழ்நாட்டில் கோவில்கள் நிர்வகிக்கப்படும் விதம் பற்றி விமர்சனங்களை முன்வைத்தார்.

" என்னுடைய கேள்வி என்னவென்றால், ’எத்தனை மக்கள் தொகையோ அத்தனை உரிமை’ என்று சொல்கிறார்கள். நான் காங்கிரஸிடம் கேட்கிறேன். தெற்கில் குறிப்பாக தமிழ்நாட்டில் கோவில்கள் மீது அரசின் பிடி இருக்கிறது. அரசு அவற்றை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டுள்ளது. கோவில்களின் சொத்துகள் கூட்டு சதி மூலம் அபகரிக்கப்பட்டு வருகிறது. கோவில்கள் சூறையாடப்படுகின்றன. கோவில் சொத்துகள் அபகரிக்கப்படுகின்றன.

ஆனால் சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் மீது கை வைக்கப்படுவதில்லை. அவற்றின் கட்டுப்பாட்டை தன்வசம் எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் இப்போது காங்கிரஸ் அளித்துள்ள முழக்கம்.... அதாவது ’எத்தனை மக்கள் தொகையோ அத்தனை உரிமை’ என்று காங்கிரஸ் கூறுகிறது. இதுதான் உங்கள் மூல மந்திரம் என்றால், இதுதான் உங்கள் சித்தாந்தம் என்றால், சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் அனைத்தையும் தெற்கில் உங்கள் கூட்டாளிகள் கைப்பற்றுவார்களா? தன் வசம் எடுத்துக்கொள்வார்களா? . சொத்துகளை மக்கள் பணிக்காக பயன்படுத்துவார்களா? அப்படி செய்ய மாட்டார்கள்." என்று அவர் கூறினார்.

மேலும் தொடர்ந்த பிரதமர் மோடி, "நான் மற்றொரு கேள்வி கேட்கிறேன் காங்கிரஸிடம் இந்த கோஷம் எழுப்புகிறார்களே, காங்கிரஸும் அதன் கூட்டாளிகளும் குறிப்பாக, தமிழ்நாட்டில் கைப்பற்றப்படும், தங்கள் வசம் எடுத்துக் கொள்ளப்படும் இந்து கோவில்களை, அதிகபட்ச மாநிலங்களில் இதுதான் செய்யப்படுகிறது. ’எத்தனை மக்கள் தொகையோ அத்தனை உரிமை’ என்று நீங்கள் சொல்கிறீர்களே, இந்த உரிமையை இந்துகளுக்கு திருப்பி அளிப்பீர்களா? பதில் சொல்லுங்கள். இந்த பொய்யான வாக்குறுதிகளை அளிக்காதீர்கள்.

மக்களை குழப்பும் இந்த விளையாட்டை விளையாடுவதை நிறுத்துங்கள். காங்கிரஸும், ’இந்தியா’ கூட்டணியும் இதுகுறித்த தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் காங்கிரஸின் தோழமை கட்சி, கேரளாவில் ஆட்சி செய்யும் கட்சி, தெலுங்கானாவில் ஆட்சி செய்யும் கட்சி, கர்நாடகாவில் ஆட்சி செய்யும் கட்சியும், காங்கிரஸுடன் சேர்ந்து இதற்கு பதில் அளிக்க வேண்டும்." என்றார்.

தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் மோசமான நிலையில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ள நிலையில், அவரின் கருத்துக்கு தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார்.

"பாஜக ஆட்சி நடக்கும் மாநிலங்கள் உட்பட பல மாநிலங்களில் கோயில்கள் மாநில அரசின் கீழ் செயல்படுகின்றன. தமிழ்நாடு அரசு எந்த கோயிலையும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இந்து கோயில்கள் அனைத்தும் முறையாக நிர்வகிக்கப்படுகின்றன" என்று கூறினார்.

"9 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த பிரதமர், இப்போது கோயில்கள் பற்றி ஏன் கேள்வி எழுப்ப வேண்டும்? அப்படி பேசுவதாக இருந்தாலும் குறிப்பிட்டு எந்த கோயிலில் பாதிப்பு இருக்கிறது என்று கூறினால் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசும், அறநிலையத் துறையும் தயாராக உள்ளோம். அதைவிட்டு அவதூறுகளை அள்ளி வீசுவது பிரதமர் மோடி வகிக்கும் பதவிக்கு அழகல்ல." என்று அவர் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Share this story