பயங்கரவாதிகள் தாக்குதல்: இஸ்ரேலுடன் துணை நிற்பதாக பிரதமர் மோடி ஆதரவு

By 
isrel

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் இன்று திடீர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஹமாஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் 4 சக்கர வாகனங்களில் இஸ்ரேலுக்குள் நுழைந்து அங்கு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு இளைஞரும் கைகளில் நவீன ரக துப்பாக்கிகளை ஏந்தியவாறு சாலைகளில் சுற்றித் திரியும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. அதோடு, ஏவுகணைகளைக் கொண்டும் ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேலின் நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஹமாஸ் இயக்கத்தினரின் இந்த திடீர் அதிரடி தாக்குதலில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த 22 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. பலர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை ஹமாஸ் பயங்கரவாதிகள் கடத்திச் செல்லும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. பலர் உயிருக்கு அஞ்சி தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வாகனங்களில் அவசர அவசரமாகப் புறப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ள நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக அந்நாடு பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது குறித்து தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, நாங்கள் யுத்தம் செய்கிறோம்  அதில் நாங்களே வெல்வோம். எங்களின் எதிரி யோசித்துப் பார்த்திராத விலையைக் கொடுக்க நேரிடும்" என்று கூறியுள்ளார்.

ஹமாஸ் பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு உலகின் பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பிரதமர் மோடியும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இஸ்ரேலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன. இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலுடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this story