இன்றைய திருமண நாளில் மாயமான மணமகன்; காதலியை கரம் பிடித்த பரபரப்பு சம்பவம்..

By 
lm11

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகில் உள்ள கிணத்துப்பட்டியை சேர்ந்தவர் பூமிராஜ் (வயது25). இவருக்கும் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் செய்ய இரு வீட்டார் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர் ஆகஸ்ட் 21ந் தேதியான (இன்று) திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.

இதனிடையே பூமிராஜ் தனக்கு இந்த பெண்ணை பிடிக்கவில்லை என்றும் தான் வேறு ஒருவரை காதலிப்பதாகவும் பெற்றோரிடம் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் திருமணம் ஏற்பாடுகள் செய்தாகிவிட்டது. அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு விட்டது. இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் திருமணம் பிடிக்கவில்லை என்றால் பெண் வீட்டாரிடம் என்ன சொல்வது என கூறி உள்ளனர்.

தனது பெற்றோரை சமாதானப்படுத்தும் வகையில் நீங்கள் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி உள்ளார். பின்னர் நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து விட்டு வருவதாக கூறி பூமிராஜ் வெளியே சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகனின் பெற்றோர் மற்றும் உறவினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது பூமிராஜ் தனது காதலியுடன் திருமணம் செய்துகொண்ட புகைப்படத்தை நண்பர்களுக்கு அனுப்பி இதனை வீட்டில் தெரிவிக்குமாறு கூறி உள்ளார். மேலும் தனது பெற்றோரிடம் தன்னை மன்னித்துக்கொள்ளும்படியும் தனக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் குரல் பதிவு மூலம் தகவல் அனுப்பினார்.

இதனால் திருமண வீட்டில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மணமகனின் பெற்றோர் மற்றும் உறவினர், ஊர் பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து பெண்ணின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தனது மகன் செய்த தவறுக்கு தாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் திருமணத்திற்காக அவர்கள் செய்த செலவை தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

இதற்கு பெண் வீட்டார் ஒருமனதாக சம்மதம் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் செலவு செய்த தொகை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தங்கள் வீட்டிற்கு சென்றனர். ஏற்கனவே அழைப்பிதழ் அனைத்தும் வழங்கப்பட்டுவிட்டதால் திருமணத்துக்கு வந்தவர்கள் நடந்த விவரங்களை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தால் அய்யலூரில் பரபரப்பு ஏற்பட்டது.

 


 

Share this story