வறுமையால் பெண் குழந்தைகளை விற்கும் அவலநிலை..

By 
pak2

ஏற்கனவே ஏழ்மையான பாகிஸ்தானில் இருக்கும் பலுசிஸ்தான் மாகாணத்தின் சௌகி ஜமாலி கிராமம், 2022-ஆம் ஆண்டின் வெள்ளத்தால் மேலும் பாத்க்கப்பட்டது. அதனால், வறுமையின் காரணமாக கடன் வாங்கிய விவசாயிகள் இப்போது அதை அடைக்கத் தங்கள் பெண் குழந்தைகளை, வயது முதிர்ந்த ஆண்களுக்கு ‘திருமணம்’ என்ற பெயரில் விற்கின்றனர்.

“கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது என் மனைவிக்கு ஆபரேஷன் செய்ய வேண்டி இருந்தது. குழந்தையின் உயிர் போய்விடும் அல்லது மனைவி இறந்துவிடுவார் என்று டாக்டர் கூறினார். மூன்றரை லட்சம் ரூபாய் கடன் வாங்கி ஆபரேஷன் செய்தேன். கடனை சீக்கிரமாக அடைக்கும்படியும் வட்டியை கட்டுமாறும் கடன் கொடுத்தவர்கள் சொன்னார்கள். மூன்றரை லட்சத்திற்கு பதிலாக ஐந்து லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது. எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அதனால் என் பத்து வயது மகளை, ஒரு கிலோமீட்டர் தொலைவில் வசிக்கும் ஒருவருக்கு விற்றுவிட்டேன்.”

வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஓராண்டுக்குப் பிறகு நான் அங்கு சென்றபோது பலுசிஸ்தானின் சௌகி ஜமாலி பகுதியைச் சேர்ந்த ஒரு தொழிலாளி, இந்தக் கதையைச் சொன்னார்.

கடந்த ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது பலுசிஸ்தானின் பல பகுதிகளுக்கு நான் சென்றிருந்தேன். அந்த வெள்ளத்தில் மாகாணத்தின் பல பகுதிகள் முற்றிலுமாக சேதமடைந்தன. சௌகி ஜமாலியும் அந்தப்பகுதிகளில் அடங்கும்.

பலுசிஸ்தானின் தொலைதூர ஜாஃப்ராபாத் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும்கூட பார்வையில் இருந்து எளிதாக தப்பிவிடக்கூடிய ஒரு பகுதி இது. பொதுவாக அதிகாரிகள் இங்கு வருவதில்லை. ஆனால் 2022 வெள்ளத்திற்குப் பிறகு, அரசு அமைப்புகள் செளக்கி ஜமாலி மற்றும் பிற பகுதிகளுக்குச் சென்றன, அதன் பிறகு பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.

2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகு அந்தப் பகுதியில் வசிக்கும் பல குடும்பங்கள் கடுமையான வறுமையில் தள்ளப்பட்டுள்ளன. இதனால் பெரும்பாலான குடும்பங்கள் தங்கள் பெண்களை விற்கிறார்கள் என்பதை இங்கு வந்த பிறகு நான் அறிந்தேன்.

சௌகி ஜமாலி பகுதி, சிந்து மற்றும் பலுசிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் தொகை சுமார் 50,000 என்று கூறப்படுகிறது. இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள்.

வெள்ளத்தால் சுமார் 32 லட்சம் குடும்பங்கள் இடம்பெயர்ந்ததாகவும், சிந்து மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்கள் அதிக சேதத்தை சந்தித்ததாகவும் 2022-ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் ஷெர்ரி ரெஹ்மான் பிபிசியிடம் கூறியிருந்தார்.

இவ்வளவு பெரிய வெள்ளம் கடைசியாக 1976-இல் ஏற்பட்டது என்று உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். இதற்குப் பிறகு, 2010-ஆம் ஆண்டிலும், 2022-ஆம் ஆண்டிலும் இதுபோன்ற வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்துக்குப் பிறகு சௌகி ஜமாலியின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.

வறுமை காரணமாக தஙகள் இளம் மகள்களை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.பெண் குழந்தைகள் விற்கப்படும் காரணத்தை விளக்கிய பள்ளி ஆசிரியர் ஒருவர், வெள்ளத்திற்குப் பிறகு விவசாயிகள் தொடர்ந்து வட்டிக்கு கடன் வாங்கியதாகவும், வட்டிக்கு வட்டி சேர்ந்து வந்தாகவும் தெரிவித்தார்.

பின்னர் கடனை திருப்பிச்செலுத்த முடியாமல் போகும்போது 40 முதல் 60 வயதுக்குட்பட்ட ஆண்களிடம் வயது குறைந்த பெண் குழந்தைகளை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் கூறினார்.2022 வெள்ளத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு இதுபோன்ற சம்பவங்கள் முன்பை விட அதிகமாக நடப்பது தெரியவருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இப்பகுதியில் நான் ஒரு தொழிலாளியைச் சந்தித்தேன். அவர் தனது தினசரி வருமானம் 500 ரூபாய் (இந்தியாவில் சுமார் ரூ. 145) என்று என்னிடம் கூறினார். தனது பத்து வயது மகளை 40 வயது ஆணுக்கு ஏன் விற்க வேண்டி வந்தது என்பதையும் அவர் விளக்கினார்.

Share this story