கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன : தமிழக சுகாதாரத்துறை
 

By 
There are 5 lakh vaccines in stock Tamil Nadu Health Department


தமிழகத்துக்கு இதுவரை 1 கோடியே 26 லட்சத்து 8 ஆயிரத்து 220 தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில் 1 கோடியே 18 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளது.

சென்னை பெருங்குடியில் உள்ள நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் தொழு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான  கொரோனா தடுப்பூசி முகாமினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர்,   கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டது.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது :

தமிழகத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 11 ஆயிரத்து 490 பேர் பயன்பெறும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டது. இதன்மூலம், இந்த பகுதியில் வசிப்போருக்கு முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளன. 

இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக கண்டறியப்பட்டு அவர்களுக்கு  கொரோனா தடுப்பூசி  செலுத்தப்படும்.

தமிழகத்துக்கு இதுவரை 1 கோடியே 26 லட்சத்து 8 ஆயிரத்து 220 தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில், 1 கோடியே 18 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளது. கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசிகள் இருக்கின்றன. 

மத்திய அரசு, ஜூன் மாதத்தில் தமிழகத்திற்கு 42 லட்சம் தடுப்பூசி வருவதாக கூறியிருந்த நிலையில், இதுவரை 24 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது. மீதம் 18 லட்சம் தடுப்பூசிகள் இந்த மாத இறுதிக்குள் தமிழகம் வரும்.

மேலும், அடுத்த மாதத்திற்கான தடுப்பூசி எண்ணிக்கையை மத்திய அரசு 71 லட்சமாக உயர்த்தி தருவதாகவும் தெரிவித்துள்ளது. 

மத்திய அரசு ஒரு மாதத்திற்கு 2 கோடி தடுப்பூசிகளை கொடுத்தாலும், அதனை செலுத்துவதற்கு தமிழக சுகாதாரத்துறை தயாராக உள்ளது' என்றார்.

Share this story