பிணவறைகளில் உரிமை கோரப்படாமல் கிடக்கும் பல சடலங்கள்..

By 
ll0

மணிப்பூரில் கடந்த மே மாதம் 3ஆம் தேதி தொடங்கிய வன்முறை இன்னும் நின்றபாடில்லை. அங்குள்ள மருத்துவமனைகளின் பிணவறைகளில் வைக்கப்பட்டுள்ள 90க்கும் மேற்பட்ட உடல்கள் அடையாளம் காண இன்னும் யாரும் முனவரவில்லை.

மணிப்பூரில் கடந்த மே 3ஆம் தேதி குக்கி மற்றும் மெய்தேய் இனக்குழுக்களின் இடையே வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து அங்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டன. மொபைல் இணையத்திற்கான தடை செப்டம்பர் 23 அன்று நீக்கப்பட்டது. அதன் பிறகு இரண்டு மாணவர்களின் சடலங்களின் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின.

இதன் காரணமாக, மணிப்பூரின் பள்ளத்தாக்குப் பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. அதனால் அரசாங்கம் மீண்டும் அங்கு மொபைல் இணையத்தை தடை செய்தது. இந்த இன வன்முறையில் இதுவரை 170க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.

குக்கி மற்றும் மெய்தேய் இனக்குழுக்களின் இடையே நடக்கும் இந்த வன்முறையில் இறந்த சுமார் 96 பேரின் உடல்கள் மணிப்பூரின் மூன்று பெரிய மருத்துவமனைகளின் பிணவறைகளில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அடையாளம் காண்பதற்கு இதுவரை யாரும் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவில்லை.

அப்பகுதி மக்கள், அச்சம் காரணமாக மருத்துவமனைகளில் இருந்து உறவினர்களின் உடல்களை எடுக்க யாரும் செல்வதில்லை என்கின்றனர்.இந்தச் சடலங்கள் பல மாதங்களாக பிணவறைகளில் கிடப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கிறது.

இந்நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட முன்னாள் நீதிபதிகள் குழு, இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் வகையில், இறந்தவர்களின் பட்டியலை பகிரங்கமாக வெளியிடுமாறு மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. இன்னும் உரிமை கோருபவர்கள் முன்வராதவர்களின் இறுதிச் சடங்குகள் முழு மரியாதையுடன் செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

Share this story