திருவண்ணாமலை தீபத் திருவிழா : 20,000 பக்தர்களுக்கு, தமிழக அரசு அனுமதி

Thiruvannamalai Deepath Festival 20,000 devotees allowed by the Government of Tamil Nadu

இந்து மக்கள் கட்சி மாநில செய்தித் தொடர்பாளர் டி.செந்தில்குமார் சென்னை ஐகோர்ட்டில், பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கூறியிருப்பதாவது :

தி.மு.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்து, இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையில் செயல்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறையும் இந்து மதத்தின் வளர்ச்சிப் பணிகளை செய்யாமல் எதிராக செயல்படுகிறது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, அனைத்து கோவில்களும் மூடப்பட்டு, பின்னர் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

தவறான முடிவு :

கோவில்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுகின்ற மகா கார்த்திகை தீப விழாவிற்கு, பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்து அறிவித்துள்ளது. இது தவறான முடிவாகும்.

கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கி வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள், பொழுதுபோக்கு கூடங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்டவற்றில் அனைவரும் அனுமதிக்கப்படும்போது கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு பக்தர்களை அனுமதிக்க மறுப்பது நியாயமற்ற செயல்.

மருத்துவம், காவல், தீயணைப்பு, மின்சாரம், குடிநீர் போன்ற உரிய ஏற்பாடுகளுடனும், பாதுகாப்பு நடவடிக்கைகளுடனும், கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடனும் அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என கடந்த 6-ந்தேதி அளித்த மனுவை முறையாக பரிசீலித்து முடிவெடுக்க அரசு, மாவட்ட நிர்வாகம், காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்' என அதில் கூறப்பட்டு இருந்தது.

இன்று விசாரணை :

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி சத்திய நாராயண பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சண்முக சுந்தரம் ஆஜராகி, நேற்று வரை 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டார்கள், தீபத் திருவிழாவிற்கு, 20 லட்சத்திற்கு மேலானவர்கள் வருவார்கள், 3 லட்சம் பேர் கிரிவலம் செல்வார்கள், 

கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்பதால், தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்று தெரிவித்தார்.

3 நாட்களுக்கு உள்ளூரை சேர்ந்த 3 ஆயிரம், வெளியூரை சேர்ந்த 7 ஆயிரம் பேரை அனுமதிக்க முடியும். கடந்த ஆண்டில் பின்பற்றப்பட்ட நடைமுறைதான் இந்த ஆண்டும் பின்பற்றப்படுவதாகவும் அவர் கூறினார்.

அனைத்து மாநிலங்களிலும் அனுமதிக்கப்படும்போது, தமிழகத்திலும் அனுமதிக்க வேண்டும். 20 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

பின்னர், அரசு தரப்பில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்வில் கட்டளைதாரர்கள் 300 பேரை அனுமதிக்கலாம் என்றும், இன்றும், நாளையும் கிரிவலத்திற்கு உள்ளூரை சேர்ந்த 5 ஆயிரம் மற்றும் வெளியூரை சேர்ந்த 15 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கோவிலுக்குள் அனுமதிக்க வாய்ப்பில்லை எனவும் கூறப்பட்டது.

அப்போது, நீதிபதிகள் மாநில அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என வலியுறுத்தியதுடன், அரசின் விளக்கத்தை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு தள்ளி வைத்தனர்.

Share this story