அன்று கிழித்தெறிந்தவர்கள், இன்று ஆதரித்தனர் : பிரதமர் மோடி பேச்சு

By 
wn5

பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இன்று டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. இதில் பிரதமர் மோடிக்கு பாராட்டு-நன்றி தெரிவிக்கும் வகையில் பிரமாண்ட ஏற்பாடுகள் மகளிர் அணி சார்பில் செய்யப்பட்டு இருந்தன.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று காலை பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-

மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பாக நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறோம். கிட்டத்தட்ட அனைத்து உறுப்பினர்களும் இந்த மசோதாவுக்கு ஆதரவும் அளித்தனர். இதற்காக அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆண்டாண்டு காலமாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்காக நாடு காத்திருந்தது.

மகளிர் இட ஒதுக்கீட்டால் அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும். இந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு பல தடைகள் இருந்தன. ஆனால் நோக்கங்கள் தூய்மையாகவும், முயற்சிகளின் வெளிப்படைத்தன்மையும் இருக்கும் போது எல்லா தடைகளையும் தாண்டி வெற்றி பெறுவதை நாம் காண்கிறோம். நாட்டின் அனைத்து பெண்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நேற்றும், நேற்று முன்தினமும் ஒரு புதிய சரித்திரம் படைத்ததை கண்டோம். அந்த வரலாற்றை உருவாக்க கோடிக்கணக்கான மக்கள் எங்களுக்கு வாய்ப்பளித்தது எங்களது அதிர்ஷ்டம்.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சாதாரண சட்டமல்ல. புதிய இந்தியாவின் புதிய ஜனநாயக உறுதிப்பாட்டின் அறிவிப்பாகும். பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் புதிய சகாப்தத்தை தொடங்குவதற்கு நான் அளித்த உத்தரவாதத்தை நிறைவேற்றியதற்கான ஆதாரம் இதுவாகும். பெண்களின் பாதுகாப்பு, மரியாதை, செழிப்புக்கான திட்டங்கள் மூலம் அவர்களின் கஷ்டங்களை போக்க எங்கள் அரசு எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டது.

பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது பெரும்பான்மை அரசாங்கத்தை கொண்ட ஒரு நாடு எவ்வாறு செயல்பட முடியும் என்பதை காட்டுகிறது. இது வலுவான பெரும்பான்மையுடன் கூடிய அரசு, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லுவதை நிரூபித்துள்ளது. மக்கள் முழுப் பெரும்பான்மையுடன் நிலையான, வலுவான அரசை தேர்ந்தெடுத்ததால் தான் மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் சாத்தியமானது.

பாராளுமன்றத்தில் முன்பு மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கிழித்தெறிந்தவர்களும், தற்போது பெண் சக்தி உருவானதால் அதை ஆதரித்தனர். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை தடுக்க யாருடைய அரசியல் சுயலாபங்களையும் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். நாட்டின் மகள்கள் மீது எங்களது எண்ணம் எப்போதும் இருக்கிறது. முத்தலாக்கில் இருந்து பெண்களை விடுதலை செய்தோம். பெண்களின் நலன்களுக்கே உண்மையாக உழைத்து வருகிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். 
 

Share this story