முயன்று பார் : கவிஞர் மருது அழகுராஜ் கூறும் நலவாழ்வியல்.. 

By 
marudhu133

பின் நவீனத்துவ உலகின் இலக்கியச் சிந்தனையாளரும், அரசியல் திறனாய்வாளரும்... யாவரும் நலமுற வாழும் வண்ணம், தொலைநோக்கு எண்ணம் நிறைந்தவருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள வலிமைமிக்க 'பேரன்புக்கவிதை' வருமாறு :

* கல் எடுத்து
வீசுபவருக்கும்

கனியை
கொடுக்கிறது
மரம்..

தலையையே
சீவினாலும்

தாகம்
தீர்க்கிறது 
இளநீர்..

சக்கையாக
பிழிந்தாலும்

இனிப்பை
தருகிறது
கரும்பு..

சல்லி
சல்லியாய்
உடைத்தும்

மதிப்பை
தருகிறது
வைரம்..

* கூழாக
கரைத்தாலும்

கூறு கூறாக
துண்டு போட்டு
சிதைத்தாலும்

நறுமணத்தை
மட்டுமே
தருகிறது
சந்தனம்..

* ஆம்..

தீங்கு
செய்பவனுக்கும்

நன்மையை
மட்டுமே

திருப்பிச் செய்வதை
நடைமுறையாக்கு.. 

நாட்டில்
நீதிமன்றங்கள்

பாதியாக குறையும்.

மன்னிப்பின்
கணக்கு கூடுமானால்

சிறைகளின் 
எண்ணிக்கை குறையும்..

பழிதீர்க்க
வழி தேடுவதை
தவிர்த்து, 

பாவம் இவர்கள்..

தன்னை
அறியாது
செய்கிறார்
என கடந்துபோ..

ஆசுவாசம்
கொள்..

ஆவேசம்
எனும்
சொல் அகற்று..

* கூலிப்படை
எனும் வார்த்தை..

குற்றவாளி
எனும் 
வாழ்க்கை.. 

அறவே இல்லாத

அன்புச் சமூகம்
அமையட்டும்.

* தன்னைச்
சுட்டவரையும்

மன்னிக்கச்
சொன்ன மகாத்மா..

சிலுவையில்
அறைந்தவருக்கும்

பாவமன்னிப்பு
தந்த இயேசுபிரான் 

இந்த அளவுக்கு
இயலாது போனாலும்

இயன்ற அளவுக்கு
முயன்று பார்..

ஆணவச்செருக்கு
அடியோடு குறையும்..

ராணுவம்
காவல்துறை செலவும்

நாட்டுக்கு
பாதியாகச் சரியும்.

* ஆம்..
அன்பு என்பதொன்றுதான்..

வறட்சியற்ற
மகிழ்ச்சிக்கு
வாய்க்கால் ஆகும்.,

முயன்று பார்..
தோற்கவே மாட்டீர்கள்..

இவ்வாறு கவிஞர் மருது அழகுராஜ் மொழிந்துள்ளார்.

Share this story