இந்தியாவில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க, அமெரிக்க நிறுவனங்கள் பெரிய அளவில் முதலீடு..

By 
hite

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று அங்கு சுற்றுப்பயணம் செய்தார். அங்கு ஹைடெக் ஹேண்ட்ஷேக் என்ற பெயரில் வெள்ளை மாளிகையில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில், மென்பொருள், செமிகண்டக்டர்கள், உற்பத்தி, விண்வெளி, மற்றும் ஸ்டார்ட்-அப் உட்பட பல துறைகளின் நிறுவன தலைவர்கள் மற்றும் வல்லுனர்களை மோடி சந்தித்தார்.

இதன் பலனாக அந்நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வருகின்றன. அமேசான் நிறுவனம், அடுத்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் கூடுதலாக 15 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது. இதன்மூலம் அதன் மொத்த இந்திய முதலீடு 26 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும்.

மேலும், 10 மில்லியன் சிறு வணிகங்களை டிஜிட்டல் மயமாக்கவும், 20 பில்லியன் டாலர் ஏற்றுமதியை செயல்படுத்தவும், 2025ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 2 மில்லியன் வேலைகளை உருவாக்கவும் அது உறுதியளித்துள்ளது. அமேசான் இந்தியா, ஏற்கனவே 6.2 மில்லியன் சிறு வணிகங்களை டிஜிட்டல் மயமாக்கி வழங்குவதற்கான முயற்சியை செய்து வருகிறது. தவிர, 7 பில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதி மற்றும் 1.3 மில்லியனுக்கும் அதிகமான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமருடனான சந்திப்பின்போது, மைக்ரோசாப்ட் இந்திய தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் உள்ளது என்று தெரிவித்திருக்கிறார். அந்நிறுவனம் கடந்த மாதம் இந்தியாவில் அரசாங்க உதவிக்காக, "ஜூகல்பந்தி" (Jugalbandi) எனும் மொபைல் சாதனங்களில் செயற்கை நுண்ணறிவு மூலம் உந்தப்பட்டு செயல்படும் சாட்போட் ஒன்றை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கூகுள் நிறுவனம் இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கலுக்கான நிதியில் 10 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்திருப்பதாகவும், குஜராத் மாநிலத்தின் கிஃப்ட் (GIFT) நகரத்தில் எங்கள் உலகளாவிய பின்டெக் செயல்பாட்டு மையத்தைத் திறக்க உள்ளதாகவும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

மைக்ரான் டெக்னாலஜி நிறுவனம், 'இந்திய செமிகண்டக்டர் மிஷன்' நிறுவனத்துடன் இணைந்து, குஜராத்தில் 2.75 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் செமிகண்டக்டர் அசெம்பிளி மற்றும் சோதனை வசதியை உருவாக்குவதாகக் கூறியுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக், ஃப்ளெக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரேவதி அத்வைதி, ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், எஃப்.எம்.சி. கார்ப்பரேஷன் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் டக்ளஸ், ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும் ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலோன் மஸ்க்கை நியூயார்க்கில் பிரதமர் மோடி சந்தித்தார். இந்திய தொழில்துறை வளர்வதற்கும், இந்தியாவில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், இந்த அறிவிப்புகள் பலனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Share this story