அமெரிக்கா, நரகத்தை நோக்கிச் செல்கிறது : முன்னாள் அதிபர் டிரம்ப் விமர்சனம்

By 
tru1

அமெரிக்காவின் 45-வது அதிபராக 2017-இல் இருந்து 2021 வரை பதவியில் இருந்தவர் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் (77).

அமெரிக்காவில் 2024-இல் மீண்டும் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தற்போதைய அதிபரான ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடனும், அவருக்கு போட்டியாக களமிறங்க துடிக்கும் டொனால்ட் டிரம்பும் ஒருவரையொருவர் சமீப காலமாக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன் ஒரு வழக்கில் சிறை சென்று சில மணி நேரங்களில் பிணையில் வெளி வந்தார் டொனால்ட் டிரம்ப். அப்போது சிறைச்சாலை விதிமுறைகளின்படி "மக் ஷாட்" எனப்படும் புகைப்படம் எடுக்கப்பட்டார்.

அந்த புகைப்படங்களை டிரம்ப் தனது சொந்த வலைதளத்தில் அனைவரின் பார்வைக்கும் வெளியிட்டிருந்தார்.

இந்த புகைப்படம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போது, "நான் அதனை தொலைக்காட்சியில் பார்த்தேன். டிரம்ப் சிறப்பான தோற்றமுடையவர்" என டிரம்பை கேலி செய்யும் விதமாக ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் டிரம்ப், பைடனை விமர்சித்து பேசும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

அதில், "கெட்ட எண்ணம் படைத்தவர் ஜோ பைடன். அவர் திறமையற்றவர் மட்டுமல்ல, சீரான மனநிலையை இழந்தவர் என நான் நம்புகிறேன். நாட்டு மக்களை அச்சுறுத்தும் விதமாக நாட்டின் எல்லைகளை அனைவருக்கும் திறந்து வைத்திருக்கிறார். நீதித்துறையையும், மத்திய புலனாய்வு துறையையும் அவர் சரியாக கையாளவில்லை. மனநிலையை இழந்தவராக நாட்டை நரகத்தை நோக்கி நகர்த்தி, ஒரு காரணமும் இல்லாமல் அமெரிக்க மக்கள் மீது 3-வது உலகப்போரை திணித்து விடுவார்" என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

பல்வேறு நீதிமன்ற வழக்குகளை சந்தித்து வரும் டிரம்பிற்கும், பைடனுக்குமான கருத்து மோதல்கள், தேர்தல் நெருங்க நெருங்க எந்த நிலையை எட்டும் என அரசியல் வல்லுனர்கள் ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

 

Share this story