ஆட்சிக்கு யார் வரக்கூடாது என்பதில் தெளிவாகவே இருக்கிறோம்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு 

By 
mks11

முதல்வர் மு.க.ஸ்டாலின்  இந்தி நாளேட்டுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில்,.

தமிழகம் வலிமை மிகுந்த மாநிலம் என்பது உண்மை. நாங்கள் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சமத்துவத் தத்துவத்தை கொண்டவர்கள். எங்கள் தாய்மொழி தமிழ், இந்தியாவின் முதல் செம்மொழித் தகுதியைப் பெற்றது.

தமிழகத்தில் தமிழைத் தாழ்த்தி, இந்தியைத் திணிக்க முயன்றால், அதனை எப்போதும் நாங்கள் எதிர்த்துப் போராடுவோம். அதே நேரத்தில், வடமாநிலங்களும், அவரவர் தாய்மொழியைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு.

தோழமைக் கட்சியினரின் கருத்துகளையும் உணர்வுகளையும் மதிக்கின்ற இயக்கம் திமுக. அதனால் இது பற்றி உரிய விளக்கமும் தரப்பட்டு, அவர்களின் வேண்டுகோளும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை வைத்து, இண்டியா கூட்டணிக்கு எதிராக அரசியல் செய்யலாம் என்று நினைப்பவர்களின் எண்ணம் நிறைவேறப் போவதில்லை.

எந்த ஒரு சமுதாயத்தையும் இன்னொரு சமுதாயத்துக்கு எதிராக நிறுத்தி ஆதாயம் தேடும் அரசியலை நாங்கள் ஒரு போதும் விரும்புவதில்லை. திமுக  அங்கம் வகித்த தேசிய முன்னணி அரசில் பிரதமர் வி.பி.சிங், இதர பிற்படுத்த வகுப்பினருக்கு மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 27% இடஒதுக்கீட்டினைக் கொண்டு வந்தார். அதன் எதிரொலியாக, வடமாநிலங்களில் சமூகநீதி பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டது. தேசிய அரசியல் கண்ணோட்டத்தில் இருந்த பல தலைவர்கள் அவரவர் மாநிலங்களுக்கான அரசியல் இயக்கத்தைத் தொடங்கினர்.

காலம் காலமாக உரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு உரிமைகள் தரப்பட வேண்டும், மாநிலங்கள் சமமாக நடத்தப்பட வேண்டும், நாட்டின் வளர்ச்சியும் ஜனநாயகத் தன்மையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் 2024 தேர்தலை இந்தியா கூட்டணி எதிர்கொள்ளவிருக்கிறது.

இந்தியாவை இண்டியா கூட்டணிமீட்கும். இண்டியா என்ற பெயரைக் கேட்டாலே நடுங்கும் நிலையில்தான் பாஜக இருக்கிறது. பிறகெதற்கு யார் வலிமையான போட்டியாளர் என்ற கேள்வி. இண்டியா கூட்டணி என்பது தலைவர்களும் கட்சிகளும் மட்டும் இடம்பெற்றுள்ள கூட்டணி அல்ல. இந்திய மக்களின் ஒருங்கிணைந்த கூட்டணி. அவர்கள், ஜனநாயக விரோத, மதவாத அரசியல் செய்யும் பாஜகவை விரட்டும் வலிமை கொண்டவர்கள். யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் இண்டியா கூட்டணியினரும் இந்திய மக்களும் தெளிவாகவே இருக்கிறோம்.

Share this story