நாங்கள் அமைதியின் பக்கம் இருக்கிறோம் : பிரதமர் மோடி பேட்டி

இந்திய பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்காவிற்கு இன்று புறப்பட்டு சென்றார். அங்கு அவர் 3-நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
வரலாற்று சிறப்புமிக்க இந்த பயணத்தை மேற்கொள்ளும் விதமாக, தமது பிரத்யேக "ஏர் இந்தியா ஒன்" விமானத்தில் புறப்படும் முன்பு, அமெரிக்காவின் புகழ் பெற்ற "தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்" எனும் பத்திரிக்கைக்கு பிரதமர் மோடி ஒரு பேட்டியளித்தார். அப்போது 5 முக்கிய தலைப்பிலான கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு :
* உலக அரங்கில் இந்தியாவிற்கான மிகப்பெரிய பங்கு: நாங்கள் எந்த நாட்டையும் மாற்றப் பார்க்கவில்லை. நாங்கள் உலக அரங்கில் உரிமையுள்ள இடத்தை கோருவதாகத்தான் பார்க்கிறோம்.
* ஐ.நா. பாதுகாப்பு சபையில் இடம் பெறும் முயற்சி: இப்பொழுதுள்ள உறுப்பினர்களின் நிலை குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தியா அதில் இடம் பெற வேண்டுமா என கேட்கப்படவேண்டும்.
* வலிமை மற்றும் சிந்தனை ஓட்டம்: இந்திய பிரதமர்களிலேயே நான் சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பிரதமர். எனவே என் சிந்தனை ஓட்டம், என் நடத்தை, என் சொல், மற்றும் என் செயல் அனைத்திலும் இந்திய கலாச்சாரத்தின் தூண்டுதலும், தாக்கமும் இருக்கும். எனக்கு தேவைப்படும் வலிமை அதிலிருந்தே கிடைக்கிறது.
சீனா குறித்த பார்வை: சீனாவுடனான இயல்பான இருதரப்பு சுமுகமான உறவுக்கு, எல்லைப்பகுதியில் சமாதானமும், அமைதியும் அவசியம். உக்ரைன் போர்: நாங்கள் எந்த பக்கமும் சேராமல் நடுநிலையோடு இருப்பதாக சிலர் சொல்கின்றனர். ஆனால், நாங்கள் நடுநிலையாக இல்லை. நாங்கள் அமைதியின் பக்கம் இருக்கிறோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.