நமக்கு ஒரு பொற்காலம் உள்ளது : பிரதமர் மோடி உரை

பிரதமர் நரேந்திர மோடி நேற்று சிறப்பு விமானம் மூலம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்துக்கு சென்றார். இன்று காலை அவர் வாரங்கல் சென்றார். அங்குள்ள பிரபல பத்ரகாளி கோவிலில் மோடி வழிபாடு மேற்கொண்டார்.
அவருடன் மத்திய சுற்றுலாத்துறை மந்திரியும், புதிதாக நியமிக்கப்பட்ட தெலுங்கானா மாநில பா.ஜனதா தலைவருமான கிஷன் ரெட்டி மற்றும் தலைவர்களும் இணைந்து வழிபாடு மேற்கொண்டனர். பின்னர் நெடுஞ்சாலை முதல் ரெயில்வே வரை வெவ்வேறு துறைகளை சேர்ந்த சுமார் ரூ.6,100 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.
அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது:-
இன்றைய புதிய இந்தியா, ஆற்றல் நிறைந்த இளம் இந்தியாவாகும். 21-ம் நூற்றாண்டின் மூன்றாம் தசாப்தத்தில் நமக்கு ஒரு பொற்காலம் உள்ளது. ஒவ்வொரு வினாடியும் முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
இன்று உலகமே இந்தியாவில் முதலீடுசெய்ய முன் வருகிறது. தெலுங்கானா மக்களின் பலம் இந்தியாவுடன் பலத்தை எப்போதும் அதிகரித்து இருக்கிறது. இன்று இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக மாறி இருக்கும் போது இதில் தெலுங்கானா மக்களுக்கு பெரும் பங்கு உள்ளது. உலகம் முழுவதும் முதலீடு செய்ய இந்தியா வரும் போது தெலுங்கானாவுக்கு பல வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு மோடி பேசினார்.
தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், மத்திய மந்திரி நிதின் கட்காரி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியை தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் புறக்கணித்தார்.