வானில் நாளை நீல நிற முழு நிலவை பார்க்கலாம்; அரிய காட்சி..
 

By 
moon1

ஒரே மாதத்தில் இரண்டு முறை முழு நிலவு தென்படும் புளூ மூன் எனப்படும் நிகழ்வு நாளை(புதன்கிழமை) நடைபெற இருக்கிறது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் ஒருமுறை முழு நிலவான பவுர்ணமியும், ஒருமுறை அமாவாசையும் தென்படும்.

ஆனால் மிகவும் அரிதாக ஒரே மாதத்தில் 2 முறை பவுர்ணமி வரும். அப்படியாக ஒரே மாதத்தில் 2 முறை முழு நிலவு நிகழ்வு தோன்றும் போது, 2-வதாக தோன்றும் முழு நிலவை ப்ளூ மூன் (நீல நிலவு) என குறிப்பிடுகிறார்கள்.

நிலவு பூமியை சுற்றி வர ஒரு மாதம் எடுத்துக் கொள்கிறது. மிகவும் சரியாகச் சொல்வதென்றால் 29.531 நாட்கள் ஆகும். அதாவது 29 நாட்கள், 12 மணி, 44 நிமிடங்கள், 38 வினாடிகள் ஆகிறது. பூமி சூரியனைச் சுற்றுவதில் எடுத்துக் கொள்ளும் நேரத்தின் கூடுதலை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை லீப் ஆண்டில் ஒரு நாளாக கணக்கில் எடுத்துக் கொள்வது போல மாதந்தோறும் நிலவு பூமியைச் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் கூடுதல் நேரத்தைக் கொண்டு 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே மாதத்தில் இரண்டு முழு நிலவு நிகழ்வு தோன்றுகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு 31 நாட்களுக்குள் 2 ப்ளூ மூன்கள் தென்பட்டன. பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் 21-ந்தேதி இதே போல் புளூ மூன் தென்பட்டது. இதை தொடர்ந்து அடுத்த புளூ மூன் நிகழ்வை நாளை (புதன்கிழமை) பவுர்ணமியில் நாம் பார்க்கலாம். இந்த மாதம் முதல் பவுர்ணமி கடந்த 1-ந் தேதி வந்தது. ஒரே மாதத்தில் 2-வது பவுர்ணமி நாளை வருகிறது.

இந்த வானியல் நிகழ்வை உலகம் முழுவதும் பார்க்க முடியும். அப்போது நிலவின் அளவு வழக்கத்தைவிட 14 சதவீதம் பெரியதாக இருக்கும். இந்த நிகழ்வு 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. இத்தகைய அபூர்வ வானியல் நிகழ்வைப் பார்க்க அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

நீல நிலவு என்று அழைக்கப்படுவதால் நிலா நீல நிறத்தில் தோன்றும் என்று அர்த்தமல்ல. ஆனால் சில நேரங்களில் வளிமண்டல நிகழ்வுகள் காரணமாக, சந்திரனின் நிறம் நீல நிறமாகத் தோன்றலாம். ஆனால், புளூ மூன் எல்லாமே நீலமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. சிவப்பு ஒளியைத் தடுக்கும் வகையில் குறுக்கே ஏதாவது இருந்தால் சந்திரன் நீல நிறத்தில் தோன்றலாம்.

இதுபோன்ற சூழல் எரிமலை வெடிப்பு ஏற்பட்டால் அந்தப் பகுதியில் இருந்து பார்க்கும்போது நிலவு நீல நிறத்தில் தெரியக்கூடும். சூரியன் மறைந்த உடனேயே புளூ மூனைப் பார்ப்பது நல்லது. அந்த நேரத்தில் அது மிகவும் அழகாக இருக்கும்.

இந்த முறை புளூ மூன் தோன்றும்போது, நாளை இரவு 8:37 மணிக்கு மிகவும் பிரகாசமாக இருக்கும். இந்த காட்சி இதற்குப் பிறகு 3 ஆண்டுகளுக்குப் பிறகு 2026-ல் தான் தோன்றும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Share this story