ரூ.10 லட்சத்தை மதுபாரில் குடிமகன்களுக்கு, வாரி வழங்கிய வாலிபர்; விஷயம் என்ன தெரியுமா?

புதுவை முதலியார் பேட்டையில் இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கருமாரியம்மன் கோவில் வீதியில் வாலிபர் ஒருவர் மதுபோதையில் மயங்கி கிடந்தார். போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அவரின் அருகில் கைப்பை கிடந்தது.
அதை சோதித்தபோது கட்டுக்கட்டாக பணம் இருந்தது. அந்த நபரை எழுப்பி விசாரித்தபோது, உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்த பெயிண்டர் கணபதி (வயது 32) என்பதும், பணத்தை பற்றி கேட்டபோது முன்னுக்கு பின் முரணாகவும் பதில் கூறினார்.
இதையடுத்து அவரை போலீஸ்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது பக்கத்து வீட்டில் சங்கர்(34) என்பவர் வசித்து வருகிறார். எல்.ஐ.சி. ஏஜெண்டான அவர் வெளியூர் சென்றிருந்தபோது அவரது வீட்டு கதவை இரும்பு ராடால் உடைத்து ரூ.10 லட்சத்தை கணபதி கொள்ளையடித்துள்ளார். அந்த பணத்தைத்தான் கணபதி செலவு செய்து வந்துள்ளார்.
கொள்ளையடித்த பணத்தில் 2 நாட்களாக மதுபார், ஓட்டல்களில் வாரி இறைத்து கணபதி செலவு செய்துள்ளார். மது பார்களுக்கு பணப்பையுடன் சென்ற அவர் தனக்கு பிறந்த நாள் எனக்கூறி, எல்லோருக்கும் பணத்தை சினிமாவில் வழங்குவது போல கட்டுக்கட்டாக வாரி வழங்கியுள்ளார். ஓட்டல்களுக்கு சென்று விதவிதமாக சாப்பிட்டுள்ளார்.
2 நாட்களில் மட்டும் ரூ.4 லட்சத்து 71 ஆயிரத்தை தண்ணீராக செலவு செய்துள்ளார் என தெரியவந்தது. பணத்தை பறிகொடுத்த சங்கருக்கு பெற்றோரின் சொத்து பாகம் பிரிக்கப்பட்டு செட்டில்மென்டாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அந்த பணத்தைத்தான் கணபதி திருடியுள்ளார்.
இதில் ரூ.4 லட்சத்து 71ஆயிரம் செலவு செய்தது போக எஞ்சிய ரூ.5. லட்சத்து 29 ஆயிரத்தை போலீசார் மீட்டனர். சங்கர் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கணபதியை கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.