உலக சாதனை புத்தகக்தில் இடம் பெற்ற 39 அடி உயர காலபைரவர் சிலை; கும்பாபிஷேகம்..

By 
bhirava

காலபைரவர்...சிவபெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர். சிவன் கோவிலின் வடகிழக்குப்பகுதியில் நின்றகோலத்தில் காட்சி தருபவர். 

பன்னிரு கைகளுடன், நாகத்தை பூணுலாகவும், சந்திரனை தலையில் வைத்தும், சூலாயுதம், பாசகயிறு,அங்குசம் ஆகிய ஆயுதங்களை தாங்கியும் காட்சி தருபவர். 

கால பைரவர் சனியின் குருவாகவும், 12 ராசிகள்,8 திசைகள், பஞ்ச பூதங்கள், நவக்கிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துப்பராகவும் கூறப்படுகிறது. காசியில் கால பைரவருக்கு 8 இடங்களில் கோவில்கள் உள்ளது. 

இதே போல் தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் காலபைரவர் கோவில் உள்ளது. பைரவர் என்றால் பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்றுபொருள். காலத்தின் கடவுளான கால பைரவர் தலை விதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர். 

இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட காலபைரவருக்கு ஈரோட்டில் பிரமாண்ட சிலையுடன் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு அவல்பூந்துறை அருகே உள்ள ராட்டை சுற்றி பாளையம் என்ற இடத்தில் ஸ்வர்ண பைரவ பீடம் சார்பில் கடந்த 2014-ம்ஆண்டு காலபைரவர் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கியது. 

இந்த கோவில் 125 அடி நீளத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் எங்கும் இல்லாத வகையில் நுழைவு வாயிலில் கோபுரத்துக்கு பதிலாக பிரமாண்ட காலபைரவர் சிலை கட்டப்பட்டுள்ளது. இதற்காக 34 அடி உயரத்தில் நுழைவு வாயில் அமைக்கப்பட்டு அதற்கு மேல் 39 அடி உயரத்தில் பிரமாண்ட காலபைரவர் சிலை அமைக்கப்பட்டு ள்ளது.

4 கைகளுடன் உடுக்கை, வேல், சூலம், அட்சயபாத்திரம் ஏந்தியவாறு நாயுடன் காலபைரவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் நுழைவு வாயில் மற்றும் காலபைரவர் சிலை மொத்தம் 73அடியில் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த சிலை மட்டும் ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 8 ஆண்டுகளாக காலபைரவர் சிலை அமைக்கும் பணி நடந்து முடிந்துள்ளது. இந்த கோவிலில் மூலவராக ஸ்வர்ண ஹர்சன பைரவர் உள்ளார். 

அது தவிர சிவனின் 64 வகையான பைரவ அவதாரங்களில் 62 வகையான பைரவர் சிலை கோவிலின் இருபக்கமும் அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிக உயரமான இந்த கால பைரவர் சிலைக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. 

ஆனாலும் தற்போதே பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் காலபைரவரை காண திரண்டு வருகிறார்கள். இதற்கிடையே இந்த சிலை யுனிக் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் எனும் உலக சாதனை புத்தகக்தில் இடம் பெற்றுள்ளது.
 

Share this story