தரமான ஸ்படிக மாலை தரும் நற்பலன்கள்..

By 
spha

ஸ்படிகம், ஒரு மணி நேரத்திற்கு நாம் ஒரு நாளில் விடும் மூச்சின் எண்ணிக்கையில் அதிர்வலைகளை வெளியிடுவதாக கூறப்படுகிறது. 

அதனால், அபரிமிதமான சக்திகளை தன்னகத்தே கொண்டு அமைதியாக விளங்குகிறது. 

ஸ்படிகத்தில் சிவலிங்கம், நந்தி, விநாயகர் போன்ற சிலைகள் சிறியது முதல் பெரியது வரை பல்வேறு அளவுகளில் கிடைக்கிறது. இவற்றை வீட்டில் வைத்து பூஜை செய்பவர்களுக்கு, அதன் ஈர்ப்பு சக்தியால் பல நன்மைகள் கிடைக்கும். 

வெறும் தண்ணீரால் அபிஷேகம் செய்தாலே போதும். இறைவனின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும். 

பலன்கள் :

ஸ்படிக மாலையை குளிர்ப்பிரதேசங்களில் வாழ்பவர்கள், குளிர்ச்சியான உடல் தன்மை பெற்றவர்கள் கண்டிப்பாக அணிவதை தவிர்க்க வேண்டும். 

இவர்களைத் தவிர, மற்றவர்கள் யார் வேண்டுமானாலும் அணிந்துகொள்ளலாம். அதிகம் கோபப்படும் நபர்கள், பிளட் பிரஷர் இருப்பவர்கள், உஷ்ண உடம்பு கொண்டவர்கள் கட்டாயம் அணியலாம் நல்ல பலன் கிடைக்கும். 

ஸ்படிக மாலையை அணிவதால் தெய்வ அருள் கிடைக்கும், அதன் அதிர்வலைகள் எப்போதும் உங்களை சுற்றி இருப்பதால், நல்ல எண்ணங்களை விதைக்கச் செய்யும், மனதை அமைதியாக வைத்திருக்க உதவும், தெளிவான சிந்தனையை தரும், தன்னம்பிக்கையை அதிகரிக்கும், உஷ்ணத்தை குறைத்து உங்களை குளிர்ச்சியுடன் வைக்கும், தீய சக்திகளை நெருங்க விடாமல் காக்கும். 

* மற்ற ரத்தின உபயோகத்திற்கும் ஸ்படிக மாலை உபயோகத்திற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. 

ஸ்படிகத்தைத் தவிர, மற்ற அனைத்து ரத்தினங்களையும் இரவில் அணியலாம். ஆனால், ஸ்படிகத்தைக் கண்டிப்பாக இரவில் அணியக்கூடாது. 

காரணம், அது உப ரத்தின வகையைச் சார்ந்தது மட்டுமல்ல. தானாகத் தன் அதிர்வுகளை வெளியேற்றும் சக்தி ஸ்படிகத்திற்குக் கிடையாது என்பதும்தான். 

காலையில் இருந்து இரவு வரை ஒருவர் ஸ்படிக மாலை அணியும்போது, அவரது உடற்சூட்டை இந்த ஸ்படிகம் தன்வசம் இழுத்துக் கொள்ளும். 

* காலையில் ஒருவர் ஸ்படிகத்தை அணியும் முன், அது குளிர்ச்சியாகவும் இரவில் அதை கழட்டும்போது உஷ்ணமாக இருப்பதைக் கொண்டு உணரலாம். இந்த ஸ்படிக மாலையை இரவில் கழற்றித் தரையில் வைக்கவேண்டும். 

அப்போது, பூமியின் ஈர்ப்பு சக்தியினால் மறுபடியும் ஈர்ப்புப் பெறும். தினமும் இதைச் செய்ய வேண்டும். 

அந்த தருணத்தில் உங்கள் மன, உடல் அழுத்தம் குறைவதை உணரலாம். எத்தனை நாட்களுக்கு அணிந்தாலும் அதன் சக்தி குறையவே குறையாது. 

* ஸ்படிகத்தை நேரடியாகவோ, வெள்ளி அல்லது தங்கத்துடன் இணைத்தோ அணியலாம். வீட்டிற்கு ஒரு ஸ்படிக மாலை இருந்தாலே போதும். 

* அதிக உஷ்ணம் உள்ள குழந்தைகள் ஸ்படிகத்தை அரைஞாணில் அணியலாம். 

இவ்வளவு அற்புதமான ஸ்படிகத்தை மற்றவர்களுக்குப் பரிசாகவும் கொடுக்கலாம். 

 விதிமுறைகள் :

* ஸ்படிக மாலை அணிந்து கொள்வதற்கு முன், குறைந்தது 3 மணி நேரம்வரை நல்ல தண்ணீரில் போட்டு விடவேண்டும். அதன் பின்னர் எடுத்துப் பயன்படுத்தலாம். வேறொருவர் அதை அணிந்தாலும் இதே போல் செய்ய வேண்டும். 

* குளிக்கும் போதும் போட்டுக்கொண்டே குளிக்க வேண்டும். இரவில் உறங்கும் போது, கட்டாயம் அவிழ்த்து தரையில் வைக்க வேண்டும். 

* காலையில், அணியும் போது மாலை குளிர்ச்சியாக இருக்கும். நாள் முழுவதும் உங்கள் உஷ்ணத்தை இந்த ஸ்படிகம் ஈர்த்துக் கொண்டிருக்கும். 

* இரவில், கழற்றி வைக்கும்போது மாலை உஷ்ணமாகி விடும். தரையில் வைப்பதால், பூமியின் ஈர்ப்பு சக்தி பெற்று மீண்டும் குளிர்ந்த நிலைக்கு செல்லும். 

* ஸ்படிக மாலையை ஜப மாலையாக உபயோகிக்கும்போது, அதற்கென்று தனியாக வைத்துக்கொள்வது நல்லது. அல்லது அணியும் மாலையையும் உபயோகிக்கலாம். 

* இறைவனின் நாமத்தை உச்சரித்து ஸ்படிக மாலையை உருட்டும் போது, மனதில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் விலகி ஓடி விடும், மன பாரம், மன அழுத்தம் குறைந்து சாந்தமாக வைக்கும். 

தரமான ஸ்படிகம் :

முதல் தரம் வாய்ந்த ஸ்படிகத்தை தொட்டவுடன், குளிர்ச்சியை வெளிபடுத்தும். நீரில் போட்டால், கண்களுக்கு புலப்படாது. நீரோடு ஒன்றி இருக்கும் சக்தி பெற்றது ஸ்படிகம். 

எனவே, தரம் வாய்ந்த ஸ்படிகத்தை வாங்கிப் பயன்படுத்தி நன்மைகளை அடையுங்கள்.
*

Share this story