பகவதி அம்மன் கோவிலில், 28-ந்தேதி ஆடி அமாவாசை வழிபாடு : சிறப்பு ஏற்பாடுகள்..

By 
bhagavathi1

கன்னியாகுமரியில் உலகப்புகழ் பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. 

இந்த கோவிலில், ஆண்டு தோறும் ஆடிமாதம் அமாவாசை தினத்தன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். 

அதேபோல, இந்த ஆண்டு ஆடி அமாவாசை தினமான வருகிற 28-ந்தேதி ஆடிஅமாவாசை விழா கொண்டாடப்படுகிறது. 

இதையொட்டி, அன்று அதிகாலை 3.30 மணிக்கு கோவில் மூலஸ்தான நடை மட்டும் திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடக்கிறது. 

அதன் பிறகு அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடக்கிறது. 

அதைத்தொடர்ந்து, தீபாராதனையும் உஷ பூஜை, ஸ்ரீ பலி பூஜை, நிவேத்ய பூஜை உச்சிகால பூஜை உச்சிக்கால தீபாராதனை போன்ற அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்படுகிறது. 

4.30 மணிக்கு வடக்கு பிரதான நுழைவாசல் திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். 

புனித நீராடல் :
 அமாவாசையையொட்டி, அன்று அதிகாலை 4 மணியில் இருந்து பக்தர்கள் கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரையில் புனித நீராடுவார்கள். 

பின்னர், கடற்கரையில் அமர்ந்து இருக்கும் வேத மந்திர ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து, பலிகர்ம பூஜை கொடுத்து தர்ப்பணம் செய்கிறார்கள். 

அதன் பிறகு, கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார்கள். 

ஆடி அமாவாசையையொட்டி, பக்தர்களின் தரிசனத்திற்காக கோவிலில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

இரவு 8.30 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 

அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலாவரும்போது பக்தர்கள் வழி நெடுகிலும் தேங்காய் பழம் படைத்து திருக்கணம் சாத்தி வழிபடுவார்கள். 

அம்மன் வீதி உலா முடிந்த பிறகு, இரவு 10 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில், ஆராட்டு நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும். 

தீபாராதனை :

கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 

அதன்பிறகு, அம்மனை வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வர செய்கிறார்கள். 

பின்னர், அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அதன் பிறகு, அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.
*

Share this story