திருப்பதி கோவிலில் தரிசனம் : இலவச டோக்கன் விநியோகம்; முழு விவரம்..

tirupati9

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், தற்போது தினமும் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பக்தர்கள் வருவதால் சுமார் 48 மணி நேரம் 5 கிலோமீட்டர் தூரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். 

இலவச தரிசனத்தில் டைம் ஸ்லாட் முறையை கொண்டு வர வேண்டும் என பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்ற தேவஸ்தான அதிகாரிகள் டைம் ஸ்லாட் முறையை அமுல்படுத்துவது என முடிவு செய்தனர். 

அதை தொடர்ந்து நேற்று முதல் இலவச தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன் வழங்கப்படும் முறை அமலுக்கு வந்தது. திங்கள், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 25 ஆயிரம் பக்தர்களும் மற்ற நாட்களில் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் டைம் ஸ்லாட் முறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

நள்ளிரவு 12 மணி முதல் இலவச தரிசன டைம் ஸ்லாட் முறையில் அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், ரெயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தராஜ் சாமி சத்திரம் மற்றும் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம் ஆகிய 3 இடங்களில் தலா 10 என 30 கவுன்டர்கள் திறக்கப்பட்டது. 

தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களும் ஆதார் கார்டு அல்லது அடையாள அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும். இலவச தரிசனத்தில் டைம் ஸ்லாட் டோக்கன் பெறுவதற்காக நள்ளிரவு முதலே கவுன்டர்கள் முன்பாக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

இதையடுத்து, தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இலவச தரிசனத்தில் டைம் ஸ்லாட் முறை ஒதுக்கீடு செய்யப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

டைம் ஸ்லாட் டோக்கன் கிடைக்காதவர்கள் நேரடியாக திருமலைக்கு வந்து வைகுந்தம் 2-வது காம்ப்ளக்சில் காத்திருந்து தங்களுக்கு உண்டான நேரம் வரும்போது தரிசனம் செய்யலாம். மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே ஒரு பக்தர் சாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

Share this story