சதுரகிரி மலையில், இன்று முதல் 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி..

By 
sathura6

விருதுநகர் மாவட்டம், வத்ராயிருப்பு அருகே வன பகுதியில் மலை மீது சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய குறிப்பிட்ட நாட்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. 

தை மாத அமாவாசையை முன்னிட்டு இன்று  (19-ந் தேதி) முதல் 22-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. 

இன்று  (19-ந்தேதி) பிர தோஷ வழிபாடும், 21-ந் தேதி தை அமாவாசை வழிபாடும் நடைபெறுகிறது. இதையொட்டி காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். 10 வயதுக்குட்பட்டோர், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மலையேற அனுமதி கிடையாது. 

கோவிலுக்கு வருபவர்கள் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகே மலையேற அனுமதிக்கப்படுவார்கள். கோவிலுக்கு வருவோர்கள் மலையில் உள்ள ஓடைகளில் குளிக்கக்கூடாது. கோவிலில் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை. 

அனுமதிக்கப்பட்ட நாட்களில் பலத்த மழையோ, அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தாலோ பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. தை அமாவாசை நாளில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் நீரோடை பகுதிகளில் வனத்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 

தை அமாவாசையையொட்டி, தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை சதுரகிரி சுந்தரமகாலிங்கசுவாமி கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

Share this story