கந்த சஷ்டி வரலாறு..

By 
murugan5

சூரபத்மன் முருகப் பெருமானிடம் போர் புரிந்து, இறுதியில் மயிலாகவும் சேவலாகவும் மாறி சரணடைந்த கதை அனைவரும் அறிந்ததுதான்.

சூரபத்மனை முருகப்பெருமான் முற்றிலும் வதம் செய்யாமல்மயிலாக வந்தபோது சேவலாக வந்த போது கொடியாகவும் ஏற்றுக் கொண்டார். முன்ஜென்மத்தில் சூரபத்மன் தட்சனாக இருந்தான். அவன் மகள் தாட்சாயினி பரமனை மணந்தாள். அந்த வகையில் தட்சனான சூரபத்மன் பரமசிவனுக்கு மாமனாகிறான்.

சிவ - பார்வதி மைந்தனான முருகப் பெருமானுக்கு சூரபத்மன் தாத்தா முறை. எந்தப் பேரனாவது தாத்தாவைக் கொல்வதற்கு முனைவானா? அதனால் தான் சூரபத்மன் மாமரமாகி நின்ற வேளையில், தன் அன்னையிடம் பெற்ற சக்திவேலால் மாமரத்தை இரண்டாகப் பிளந்து, 'நான்' என்னும் அகங்காரம் சேவலாகவும், 'எனது' என்னும் மமகாரம் மயிலாகவும் மாறியது. சேவலைக் கொடியாக்கி, மயிலை வாகனமாக்கிக் கொண்டார் முருகப் பெருமான என்கிறார்

சூரபத்மனின் ஆணவத்தை அழிப்பதற்கென்றே அவதரித்தவர் முருகக் கடவுள். இந்த சிவமைந்தன் முற்பிறவியில் பிரம்மதேவனின் மைந்தனாக பிரம்மஞானி சனக்குமாரர் என்ற பெயர் தாங்கி முக்காலம் அறிந்த ஞானியாகத் திகழ்ந்தார் என்றும் விவரிக்கிறது புராணம்.

ஒரு முறை, சூரர்களைப் போரிட்டு வதம் செய்வது போல் கனவு கண்டார். அதனை தன் தந்தையான பிரம்மாவிடம், 'தந்தையே! நான் சேனாதிபதியாக நின்று அசுரர்களை வதம் செய்வதாகக் கனவு கண்டேன்' என்று சொன்னார். அதற்கு அவர், 'சனத்குமாரா, உன் கனவு பலிக்கும். ஆனால், நீ பிரம்மஞானியாக இருப்பதால் இந்தப் பிறவியில் அது இயலாத காரியம்.

அடுத்த பிறவியில் உனக்கு அந்தப் பாக்கியம் கிட்டும்' என்றார். முருகப் பெருமானின் அவதாரத்தை முன்னிட்டு சிவனாரும் உமையவளும் சனத்குமாரரைக் காண வந்தார்கள். தியானத்தில் இருந்த சனத்குமாரர் தியானம் முடிவடைந்ததும் தன் முன் சிவனும் பார்வதியும் நிற்பதைக் கண்டு வணங்கினார். அப்போது பரமேஸ்வரன் 'மகனே. உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்' என்றார். அதற்கு சனத்குமாரர், 'நீங்கள் ஒன்றும் எனக்கு வரம் தர வேண்டாம் உங்களுக்கு வேண்டுமானால் நான் வரம் தருகிறேன், கேளுங்கள்' என்றார். இதைக் கேட்டு கோபம் கொள்ளவில்லை சிவனார்.

"நீ எனக்கு மகனாகப் பிறக்க வேண்டும்" என்று வரம் கேட்டார். சனத்குமாரரும், "உங்கள் விருப்பப்படியே உங்கள் அருளால் உங்களுக்கு மகனாகப் பிறப்பேன்" என்றார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த பார்வதி, "உம் அருளால் மகனாகப் பிறப்பேன் என்றால், என் பங்கு ஒன்றுமில்லாதது போல் தெரிகிறதே" என்றாள். "ஆம். கர்ப்பவாசத்தில் தோன்றப் போவதில்லை. எனவே, அருள் கூர்ந்து தங்கள் கணவரின் அருள் பார்வையால் நான் அவதரிக்கும்படி செய்யுங்கள்" என்றார். பார்வதியும், "சரி, உன் விருப்பம் போல் நடக்கும்" என ஆசீர்வதித்தாள். காலங்கள் கடந்தன.

பஸ்மாசுரனைக் கொல்ல சிவபெருமான் மகா விஷ்ணுவுடன் சென்றபோது, பார்வதி தனித்திருப்பதை அறிந்த பஸ்மாசுரன் பார்வதியைத் தேடி வந்தான். தன் கணவனைப் பிரிந்த சோகத்தில் உருகிக் கொண்டிருந்த உமையவள், பஸ்மாசுரன் வருவதை அறிந்து அவனிடமிருந்து தப்பிக்க பொய்கையாக மாறினாள்.அது தான் சரவணப் பொய்கை எனப்படுகிறது.

மகாவிஷ்ணுவின் மோகினி அவதாரத்தால் பஸ்மாசுரன் எரிந்து சாம்பல் ஆனதும், பரமசிவன் கயிலாயம் வரும் வழியில் பார்வதி பொய்கையாக மாறி இருப்பதைக் கண்டு, இது தான் தக்க தருணம் என்று தன் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளை அந்தப் பொய்கையில் விழும்படி செய்தார். சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகள், ஆறு குழந் தைகளாக தாமரை மலர்கள் மேல் எழுந்தருளின. அந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் எடுத்துப் போற்றினார்கள்.

இதனைக் கண்ட பார்வதி, அந்த ஆறு குழந்தைகளையும் அவர்களிடமிருந்து வாங்கி ஒன்றாக்கினாள். அந்தக் குழந்தையே ஆறுமுகம் கொண்ட சரவணன் என்கிற முருகப் பெருமான். இப்படித்தான் சனத்குமாரர் முருகக் கடவுளாக அவதரித்தார். சூரபத்ம வதமும் நிகழ்ந்தது. தேவர்களும் மகிழ்ந்தனர். இதன் காரணமாகத்தான் ஐப்பசி மாதம் வளர்பிறையிலிருந்து ஆறு நாட்கள் திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா நடைபெறுகிறது.

சஷ்டி திதி அன்று சூரசம்ஹார நிகழ்ச்சி திருச்செந்தூர் கடற்கரையில் மிகச் சிறப்பாக நடைபெறும். கந்த சஷ்டி வேளையில் விரதம் இருந்து கந்தனை வணங்கி மகிழ்வார்கள் முருக பக்தர்கள்.
 

Share this story