அத்தனூர் அம்மன் கோவிலில், இன்று கும்பாபிஷேக விழா; நாளை மண்டலாபிஷேகம்..

By 
atha

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே பிரசித்தி பெற்ற அத்தனூர் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் புராண கால சிறப்பு கொண்டதாகும். 

கொங்கண சித்தர் மலை சாரலில் அமைந்துள்ள அத்தனூர் அம்மன் கோவில் மன்னர்கள் வழிபட்டதாகவும், இதனால் கோவிலுக்கு சுகவனம் என்ற பெயர் பெற்றதாக நம்பப்படுகிறது. இந்த கோவிலில் திருப்பணிகள் நிறைவுபெற்று இன்று (திங்கட்கிழமை) மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. 

விழாவையொட்டி கடந்த 7-ந் தேதி விக்னேஸ்வரா பூஜை, மகா கணபதி ஹோமம், கோ பூஜை நடந்தது. 8-ந் தேதி மங்கள இசையுடன் தீர்த்தக்குடங்கள், முளைபாலிகைகள் எடுத்து வருதல், புண்யாகம், பஞ்சகவ்யம், தீபாராதனை நடைபெற்றது. 

9-ந் தேதி மகாலட்சுமி, சரஸ்வதி ஹோமம், கலசாபிஷேகம், விநாயகர் பூஜை மற்றும் நேற்று திருமுறை பாராயணம், பூதசுத்தி புண்யாகம், யாகபூஜை, தீபாராதனை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தன. 

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மங்கள இசை, திருமுறை பாராயணமும், விமானம் கண் திறப்பு, ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ அத்தனூர் அம்மன், ஸ்ரீ அத்தாயி அம்மன், மூலவர் பிரதிஷ்டை, அஷ்டபந்தனம், மருந்து சாத்துதல், பரிவார தெய்வங்கள் அஷ்ட மருந்து சாத்துதல் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு லமல் புண்யாகம், மண்டபார்ச்சனை, யாகபூஜை, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 3 மணிக்கு மேல் விநாயகர் பூஜை, புண்யாகம், பிம்பசுத்தி, ரக்‌ஷாபந்தனம், நாடி சந்தானம், வஸ்திர சமர்பணம் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. 

இதையடுத்து காலை 6.30 மணிக்கு மேல் ராஜகோபுரம் மற்றும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ அத்தாயி அம்மன், உறும்பிக்காரன், ஸ்ரீ முத்து முனியப்பன், ஸ்ரீ மகா முனியப்பன், ஸ்ரீ ராஜ முனியப்பன், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ ஆதிமூலவர் மற்றும் பரிவார தெய்வகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 

பின்னர் காலை 9 மணிக்கு மேல் மகா அபிஷேகம், தசதரிசனம், அலங்காரம், உச்சிகால பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்கப்படுகிறது. 

நாளை (செவ்வாய்க்கிழமை) 48 நாட்களுக்கான முழு மண்டலாபிஷேகம் நடக்கிறது.
..........

Share this story