மானம் காத்த கண்ணபிரான்..

srik1

துரியோதனன் பாண்டவர்களுக்கு எப்படியாவது தீங்கு இழைக்க வேண்டும் என்று துடித்தான். மாமன் சகுனியின் துர்போதனையின்படி, திருதராஷ்டிரன் மூலமாக பாண்டவர்களுக்கு பொழுது போக்காக சதுரங்கம் ஆட வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. 

அதில் விருப்பமில்லாவிடினும், பெரியய்யாவின் அழைப்பை தட்ட முடியாமல் அவர்கள் வந்தனர். சகுனி தன் தீய எண்ணத்தை மறைத்து உதட்டில் தோனொழுகப் பேசி தர்மரை தன்னுடன் சூதாடுவதற்கு இணங்க வைத்து விட்டான். சகுனி பகடைக் காய்கள் உருட்டுவதில் மகா நிபுணன். 

தருமர் ஆடுகள், மாடுகள், குதிரைகள், யானைகள், அணிகள், மணிகள், அளவில்லாத பொற்குவியல்கள் என்று வரிசையாகப் பணயம் வைத்து ஆடித் தோற்றுக் கொண்டே போனார். முடிவில் தம்பிமார்களை வைத்து ஆடினார். அதிலும் சகுனி ஜெயித்தான். 

ஆட்டத்தில் தோற்றதை எல்லாம் மீட்க வேண்டும் என்ற வேகத்தில் திரவுபதியை பணயம் வைத்து ஆடி அதிலும் தோற்றார். முடிவாக சகுனி, "உன் நாட்டை வைத்து ஆடு. நீ இழந்ததை யெல்லாம் மீண்டும் பெறலாம்" என்று தூண்டினான். அவரும் மதிமயங்கி நாட்டையே பணயம் வைத்து ஆடித் தோல்வி அடைந்தார். 

துரியோதனன், "நீங்கள் எல்லாம் இனி என் அடிமைகள். திரவுபதியும் எங்களுக்கு ஏவல் செய்ய வேண்டியவள்" என்று சொல்லி கைகொட்டிச் சிரித்தான். திரவுபதியின் மீது அவன் மனதில் முன்பே முண்டி இருந்த கோபத்தீயை அணைத்துக் கொள்ள இதுவே நேரம் என்று எண்ணி அவளை சபைக்கு கொண்டு வருமாறு தம்பி துச்சாதனனிடம் கட்டளையிட்டான். 

அவனும் மிக மகிழ்ச்சியோடு புறப்பட்டு போய் திரவுபதியை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து துரியோதனன் முன் நிறுத்தினான். துரியோதனன், அவளை துகிலுறிக்குமாறு துச்சாதனனிடம் சொன்னான். அந்த துஷ்டனும் சிறிதும் இரக்கமில்லாமல் திரவுபதியின் புடவை தலைப்பை இழுத்து இழுக்கத் தொடங்கினான். 

சபையில் இருந்தவர்கள் எல்லாம் செயலற்று, வாய்மூடி ஊமைகளாயினர். திரவுபதி இரண்டு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தி, "ஹரி ஹரி கிருஷ்ணா, அபயம்! அபயம்! நீதான் எனக்கு துணை" என ஓலமிட்டாள். அந்த அனா தரட்சகன் உடனே கருணை புரிய, திரவுபதியின் புடவை வளர்ந்து கொண்டே போனது. 

துச்சாதனன் அதைப்பற்றி இழுத்து இழுத்து போட்ட புடவை மலைபோல் கிடக்க அவன் கை ஓய்ந்து, கீழே சாய்ந்தான். தனக்கு தக்க சமயத்தில் உதவிய திரவுபதிக்கு கிருஷ்ணரும் தக்க சமயத்தில் உதவி மானம் காத்தார்.
 

Share this story