மதுரை மீனாட்சியும், பன்னிரு கோபுரமும்.!

By 
madurai5

மீனாட்சி அம்மன் கோவிலை நினைத்தால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அதன் கோபுரங்கள் தான். இந்த கோபுரங்களில் எண்ணற்ற சிற்பங்களும் உள்ளன. 

சிவமகாபுராணம், திருவிளையாடற்ப புராணம், லிங்கபுராணம், தேவி மகாத்மியம் முதலிய புராணங்கள் தொடர்பான சிற்பங்கள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.

வெளிகோபுரங்கள் :
 
கோவிலின் வெளி மதிலில் 4 திசைகளிலும் 4 கோபுரங்கள் உள்ளன. இவை வெளிகோபுரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 

ஒவ்வொரு கோபுரமும் 60 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செய்யப்பட்ட வாயிற் தூணோடு தொடங்கி படிப்படியாக பல அடுக்குகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 4 வாயில்களும் உயர்ந்தஉறுதியான கதவுகளை கொண்டுள்ளது.

இந்த கோபுரங்களின் அடிப்பகுதி கருங்கல்லினால் ஆனது. இவற்றின் உப பீடம், அதிஷ்டானம், பாதம் ஆகிய பகுதிகளில் கணப்படும் சிற்ப வேலைப்பாடுகள் அழகுற அமைந்துள்ளன. கருங்கல் பகுதிக்கு மேலுள்ள சிகரப்பகுதி பல நிலைகளைக் கொண்டுள்ளது. 

இந்த பகுதி செங்கல், சாந்து இவற்றால் ஆனது. மேல்நிலைகளில் சுதைச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வெளிகோபுரங்கள் நான்கும் அவை அமைந்துள்ள திசைகளை கொண்ட கிழக்கு கோபுரம், மேற்கு கோபுரம், தெற்கு கோபுரம், வடக்கு கோபுரம் என்று அழைக்கப்படுகின்றன.

கிழக்கு கோபுரம் :

சுவாமி சன்னதிக்கு நேர் எதிரே, கிழக்கு ஆடி வீதியைச் சார்ந்து அமைந்துள்ள கிழக்கு வாயிலின் மேல் அமையப் பெற்றுள்ளது. 4 கோபுரங்களிலும் இதுவே மிகவும் பழமையானதாகும். 

இதற்கு சுந்தரபாண்டியன் கோபுரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

இது கி.பி.1216 முதல் 1238 வரை ஆட்சி செய்த மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டது என்றும், கி.பி. 1251 முதல் 1278 வரை அரசாண்ட சடையவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டது என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன. 

இது 153 அடி உயரம் கொண்டது. இதன் அடித்தளம் நீளம்111 அடி அகலம் 65 அடி. கிழக்கு கோபுரம் 1011 சுதைகளுடன் 9 நிலைகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

தெற்கு கோபுரம் :

விசுவநாத நாயக்கர் காலத்தில் கி.பி.1559-ல் இந்த கோபுரம் திருச்சி நகரைச் சேர்ந்த சிராமலை செவ்வந்தி மூர்த்தி செட்டியார் என்பவரால் கட்டப்பட்டது. 4 கோபுரங்களிலும் இந்த கோபுரம் உயரமானது. 

இந்த கோபுரத்தின் உயரம் 160 அடி, அடி தளத்தின் நீளம் 108 அடி, அகலம் 57 அடி. 9 நிலைகளைக் கொண்டு அமைந்துள்ள 
இதில், புராண கதைகளை விளக்கும் 1,511 சுதை சிற்பங்கள் உள்ளன. 

கட்டுமானத்தின்போது, இவை அமைக்கப்படவில்லை. 

பிற்காலத்தில் தான் அமைக்கப்பட்டது என்ற செய்தியை கி.பி.1798-ம் ஆண்டு கல்வெட்டு கூறுகிறது.

மேற்கு கோபுரம் :

கி.பி.1315 முதல் 1347 வரை மதுரையை ஆண்ட சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் என்ற மன்னன் இதனை கட்டினான். கி.பி.1323-ல் கட்டி முடிக்கப்பெற்றது. 9 நிலைகளை கொண்டது.இதன் உயரம் 154.6 அடி. அடிதளம் நீளம் 101 அடி, அகலம் 63.6 அடி.இதில் 1124 சுதை சிற்பங்கள் உள்ளன. 

சித்திரை வீதியில் இருந்து, வாகனங்களில் பொருட்களை கோவிலுக்குள் கொண்டுவர ஏதுவாக படிகள் இல்லாதபடி, இக்கோபுர வாயில் அமைக்கப்பட்டுள்ளது.

வடக்கு கோபுரம் :

இந்த கோபுரத்தின் கட்டுமான பணியை முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி.1564-72) தொடங்கினார். 

இதனை கி.பி.1878-ல் வயிநகரம் செட்டியார் நிறைவு செய்தார். 9 நிலைகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 

இதன் உயரம் 152 அடி. அடி தளத்தின் நீளம் 111.6 அடி. அகலம் 66.6 அடி. இந்த கோபுர வாயிலின் மேற்கு பக்கம் முனியாண்டி கோவில் உள்ளது. இது ஒருநாட்டுப்புற காவல் தெய்வமாகும்.

இந்த கோபுரத்தை கட்டிய கிருஷ்ணப்ப நாயக்கர் மீனாட்சி அம்மன் கோவிலில் மேலும் பல திருப்பணிகளை செய்துள்ளார். 

சுந்தரேசுவரர் சன்னதி முன்னுள்ள கம்பத்தடி மண்டபம், இதன் அருகில் அமைந்துள்ள திருஞானசம்பந்தர் மண்டபம், 2-ம் பிரகார சுற்று மண்டபம், அம்மன் கோவில் நடுப்பிரகார மண்டபம் ஆகியவை இந்த மன்னர் கட்டியது ஆகும். 

இவரது ஆட்சிக் காலத்தில் தான் அரியநாத முதலியார் கி.பி.1570-ல் ஆயிரங்கால் மண்டபத்தை கட்டினார்.

ராய கோபுரம் :

மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலின் நான்கு புற கோபுரங்கள் தவிர, இத்துடன் தொடர்புடைய கோபுரம் புது மண்டபத்திற்கு கிழக்கே ஒன்றுண்டு. 

இந்த கோபுரம் திருமலை நாயக்கரால் கி.பி.17-ம் நூற்றாண்டு கட்ட தொடங்கப்பட்டது. இதன் அடித்தளம் 174 அடி நீளமும், 117 அடி அகலமும் கொண்டது. மற்றைய 4 கோபுரங்களின் அடித்தளங்களோடு ஒப்பிடும்போது இந்த கோபுரத்தின் அடித்தளம் மிக நீளமாகவும் அகலமாகவும் உள்ளது.

இந்த கோபுரம் ராயகோபுரம் என்று அழைக்கப்படுகிறது. ஏதோ சில காரணங்களால், இந்த கோபுரம் முதல் தளத்துடன் நின்று விட்டது. முதல் தளத்தின் உயரம் 57 அடியாகும். 

இதுகட்டி முடிக்கப்பட்டிருந்தால் ஏனைய 4 கோபுரங்களை விட உயர்ந்த கோபுரமாக திகழ்ந்திருக்கும்.

வெளிக்கோபுரங்கள் தவிர, சுவாமி கோவிலில் 5 சிறிய கோபுரங்களும், அம்மன் கோவிலில் 3 சிறிய கோபுரங்களும் அம்மனுக்கும், சுவாமிக்கும் தனித்தனியாக 2 தங்க விமானங்களும் உள்ளன.

பாண்டிய நாட்டில்.. மீனாட்சியின் மீன் கொடி ஆட்சி போற்றுதும்.!
*

Share this story