மீனாட்சி அம்மன் கோவில், கார்த்திகை திருவிழா 1-ந்தேதி தொடக்கம்..

By 
meen1

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் கார்த்திகை மாத திருவிழா வருகிற 1-ந் தேதி தொடங்கி 10-ந் தேதி வரை நடக்கிறது. 

1-ந் தேதி காலை 10.30 மணியில் இருந்து 10.54 மணிக்குள் சுவாமி சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. 

விழா நாட்களில் மீனாட்சி-சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை என இருவேளைகளிலும் ஆடி வீதிகளில் வலம் வந்து காட்சி அளிப்பர். விழாவின் முக்கிய நாளான 6-ந் தேதி கார்த்திகை தீபதினத்தன்று மாலையில், கோவில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்படும். 

மேலும் அன்று இரவு 7 மணிக்கு மீனாட்சி-சுந்தரேசுவரர், கோவிலில் இருந்து புறப்பட்டு, கீழமாசிவீதியில் உள்ள அம்மன் தேரடி மற்றும் சுவாமி சன்னதி தேரடி அருகில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வில் எழுந்தருள்கிறார்கள். 

திருவிழா நடைபெறும் நாட்களில் கோவில் உபய தங்கரதம், உபய திருக்கல்யாணம், உபய வைரக்கிரீடம் போன்ற நிகழ்வுகள் நடைபெறாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share this story