நலம் அருளும் நவ பிருந்தாவனம்.!

nava1

கர்நாடகா மாநிலத்தில் உள்ளது ஆனேகுந்தி என்ற இடம். இங்கு 'நவ பிருந்தாவனம்' அமைந்துள்ளது. 

இறைபக்தியில் வாழ்ந்து மறைந்த மகான்களின் சமாதியை 'பிருந்தாவனம்' என்றும் அழைப்பார்கள். 

அப்படி மகான்களின் சமாதிகள் ஒரே இடத்தில் அமைந்த இந்த இடம் 'நவ பிருந்தாவனம்' என்று அழைக்கப்படுகிறது. 

ஸ்ரீ ராமர் :

ராமாயணத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்ட ஊராக, கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பி அறியப்படுகிறது. 

ஏனெனில் ராமபிரான் வனவாசம் வந்தபோது, வாலி என்னும் வானர அரசன் ஆட்சி செய்த பகுதியே கிஷ்கிந்தை. சுக்ரீவனும், அனுமனும், மற்ற பிற வானர வீரர்களும் இங்குதான் வசித்தனர். 

அந்த கிஷ்கிந்தையே, இன்றைய ஹம்பி என்று சொல்லப்படுகிறது. இங்கு சமாதியாகி உள்ள ஒன்பது பேரும், ராகவேந்திர சுவாமிகளின் ஆசார்ய குருமார்கள் என்று சொல்லப்படுகிறது. எனவே இந்த இடம் புனிதமானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் நம்பப்படுகிறது. 

துங்கபத்ரா நதி :

நவ பிருந்தாவனம் அமைந்த இடம் ஒரு தீவு போன்ற பகுதியாகும். ஒரு புறம் துங்கா என்ற நதியும், மறுபுறம் பத்ரா என்ற நதியும் ஓடுகிறது. 

இந்த இரண்டு நதியும் இணையும் பகுதியில் 'துங்கபத்ரா' நதியாக மாறுகிறது. அப்படி துங்கபத்ரா நதியாக மாறும் இடத்தில், ஒரு பாறையில்தான் இந்த நவ பிருந்தாவனம் அமைந்திருக்கிறது. 


ராமாயணத்தில், சீதையைத் தேடி வனத்திற்குள் அலைந்து திரிந்த ராமரும், லட்சுமணரும், இந்த பாறையின் மேல் அமர்ந்திருந்ததாக தல வரலாறு சொல்கிறது. இந்த இடத்தில்தான் ராமபிரானை, ஆஞ்சநேயர் முதன் முறையாக சந்தித்ததாகவும் சொல்லப்படுகிறது. 

நதியின் நடுவில் தீவு போல் அமைந்த இந்த நவ பிருந்தாவனத்தை அடைய, மோட்டார் படகு மூலம்தான் செல்ல முடியும்.
 

Share this story