சபரிமலை ஐயப்பன் கோவில் : மாலை அணிபவர்கள் கவனிக்கவும்..

By 
ayyappan3

சபரிமலையில் குடிகொண்டுள்ள ஸ்ரீஐயப்பனை தரிசனம் செய்யச் செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி மனது, உடல் ஆகிய இரண்டையும் தூய்மையாக்கி ஐயப்பனை நினைத்து மாலை அணிந்து விரதம் தொடங்கி விடுவார்கள்.

இவ்வாறு விரதம் மேற்கொள்ளுபவர்கள் விரதகாலத்தில் அதிகாலையிலும் மாலையிலும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இதனால் உடலும் மனமும் மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும்.

விபூதி, சந்தனம் குங்குமம் போன்றவை தரித்து பூஜைகள் செய்து அவரவர் வசதிக்கு ஏற்ப 108 அல்லது 1008 சரணகோஷங்கள் முழங்க வேண்டும். விரதகாலம் முழுமையும் ஒருவேளை அளவோடு சைவ உணவருந்தி இரவில் பழம், பால் போன்ற எளிமையான ஆகாரங்கள் உட்கொண்டு உபவாசம் இருக்க வேண்டும்.

சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் விரதகாலங்களில் கருப்பு, நீலம் ஆரஞ்சு, காவி போன்ற நிறங்களில் உள்ள வேஷ்டிகளையே அணிதல் வேண்டும். விரதத்தின்போது வீட்டு விலக்கான பெண்களின் அருகாமையைத் தவிர்க்க வேண்டும்.

விரதம் இருக்கும்போது மது, சிகரெட், போன்ற போதை வஸ்துகளைப் பயன்படுத்தக்கூடாது. சபரிமலை செல்லும் பக்தர்கள் முக்கியமாகக் கடைபிடிக்க வேண்டிய விரதம் பிரம்மச்சர்ய விரதம். மாலை போட்டிருக்கும்போது பகல் நேரத்தில் உறங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

இரவில் தூங்கும்போது தலையணை, மெத்தை போன்றவற்றைத் தவிர்த்து தரையில் வெறும் துண்டு அல்லது எதுவும் விரிக்காமல் படுத்து உறங்க வேண்டும் என்பது ஐதீகம்.
 

Share this story